Wednesday, March 11, 2015

சுமாரான போக்குவரத்து உள்ள சாலைகளின் சந்திப்பு அது. அருகில் புதிதாக வந்துள்ள வணிக வளாகம் அதன் பங்கிற்கு கூட்டத்தை இழுத்து சாலையில் விட்டுக்கொண்டு இருந்தது. முகப்பில் உள்ள டீசல்/பெட்ரோல் கடை அன்று வழக்கைத்தைவிட அதிக கூட்டத்துடன் காணப்பட்டது. சாலைகள் சந்திப்பின் அருகே இரு சாலைகளின் மையமாக இருக்கும் சிமெண்ட் தீவுப்பகுதியில் (Median) பெயிண்ட் டப்பாவைக் தலைகீழாகப் போட்டு அதில் அமர்ந்திருந்தாள் அவள். கலைந்துபோன தலை முடி, தொய்வான ஆடைகள் சகிதம்.  சாலைச் சந்திப்பில் எப்போதும் ஏதாவது ஒருபுறம் சிவப்பு விளக்கு எரிந்துகொண்டே இருக்கும் ஒன்று மாற்றி ஒன்று. சிகப்பு விளக்கைத் துரத்திச் சென்று எல்லாப் பக்கமும் செல்ல முடியாது. இதனால் இவர்கள் ஏதேனும் ஒரு பக்கம் டப்பாவைக் கவுத்தி உட்கார்ந்து விடுவார்கள். தங்கள் பக்கம் உள்ள சாலையில் சிகப்பு விளக்கு எரிந்தவுடன்  வாகன ஓட்டியின் இடதுகை பக்கம் வருமாறு எழுந்து நின்றுவிடுவார்கள். வயதான சிலர் பல மணி நேரம் அப்படியே நின்று கொண்டு இருப்பதையும் பார்த்திருக்கிறேன்.

அன்று குளிர்காலம் (பனிகாலம்) முடிந்து வசந்தகாலம் ஆரம்பிக்கும் வாரஇறுதி .எனக்கு மிகவும் பிடித்தமான காலம். அன்று சனிக்கிழமை அன்று இரவுதான் நேரத்தை ஒரு மணிநேரம் முன் தள்ள வேண்டும். இலையுதிர் காலத்தில் எடுத்துக்கொண்ட நேரத்தை இப்போது திருப்பிக்கொடுக்க வேண்டும். அன்று நான் செய்யும் பகுதி நேரவேலை/தன்னார்வப்பணி இடத்தில் வடக்கு கரோலைனா மாநில பல்கலைக்கழக கூடைப்பந்து அணிக்கும், நியூயார்க் சைரஃச் பல்கலைக்கழக கூடைப்பந்து அணிக்கும் இடையேயான போட்டி ( Joe Biden, Vice President of the United States இந்தக் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்.)  வடக்கு கரோலைனா மாநில பல்கலைக்கழக கூடைப்பந்து அணிக்கு அதுதான் அந்த பருவத்தின் இறுதிப்போட்டி. அதற்குப்பின் அவர்கள் பிற வெற்றி பெற்ற அணிகளுடன் நடக்கும் தொகுதிவாரிப் போட்டிக்குப் போய்விடுவார்கள்.

இப்படி சாலையில் இருப்பவர்களுக்கு உதவ‌ நினைக்கும் தருணங்கள் எப்போதும் குழப்பமானது. சாலையில் கார் நிற்கும் அந்த‌ சில நிமிடங்களில் கொடுக்கவா? வேண்டாமா? என்று முடிவு செய்து, அதிலும் எவ்வளவு கொடுக்கலாம் என்று முடிவு செய்து , விளக்கு பச்சைக்கு மாறும்முன் கொடுத்துவிட வேண்டும். கொடுக்க நாம் தயாராக இருந்தாலும் அவர்கள் நம்மைக் கவனிக்காவிடில் சிக்கல்தான். இந்தமுறை நான் அவளை தூரத்தில் இருந்தே பார்த்துவிட்டேன். இன்று கொடுத்தே ஆகவேண்டும் என்று முடிவுடன் காரின் சன்னல் கதவை இறக்கிவிட்டு கையில் சில ஒரு டாலர் பணத்துடன் இருந்தேன்.

எனது காருக்கு முன்னால் ஒரு கார் இருக்கும் வகையில்  சிகப்பு விளக்கு எரிந்து வாகனங்களை நிறுத்தியது. பஞ்சு மிட்டாய் கலரில் சின்ன கால்சட்டையும், கண்ணைப்பறிக்கும் பச்சை அரைப்பனியனுடனும் வலதுபுறம் ஓடிக்கொண்டிருந்த ஒரு பெண் எனது காருக்கு முன்னால் குலுங்கி குலுங்கி சாலையைக் கடந்தாள். ஒருவாரத்திற்கு முன் இந்த ஊர் பனியால் மூடிக்கிடந்தது, இந்தவாரம் இப்படி மாறி இருந்தது. சாலையில் ஓடுபவர்கள் எல்லாம் ஒருவகையில் எனக்கு நெருக்கமானவர்கள். ஓட்டம் எனக்கு மிகவும் பிடித்த உடற்பயிற்சி.

அதற்குள் அந்த அட்டைப்பெண் என் காரை நெருங்கிவிட்டிருந்தாள். கையில் பிடித்த அட்டையுடன் என்னை நெருங்கி பணத்தைப் பெற்றுக்கொண்ட அவள் என்னை நோக்கி "நன்றி , கடவுள் உன்னை ஆசிர்வதிப்பார்" என்றார். கடவுள் தன்னை தெருவில் நிறுத்திவிட்டாலும் அடுத்தவனையாவது ஆசீர்வதிக்கட்டும் என்ற எண்ணமாக இருக்குமோ தெரியவில்லை. இங்கே இப்படி ரோட்டில் இருப்பவர்கள் யாரையும் தொந்தரவு செய்வது இல்லை. ஒரு சின்ன அட்டையில் ஏதாவது ஒரு செய்தியை எழுதி வைத்துக்கொண்டு அப்படியே எங்கோ வெறித்தபடி இருப்பார்கள். போகும் காருக்கெல்லாம் "காட் ப்ளஃச் யு" சொல்லும் ஒருவர் எனக்குத் தெரியும். அவர் எழுந்து நிற்கமாட்டார். யாராவது அழைத்தால் மட்டுமே வந்து பணத்தை வாங்கிக்கொள்வார். ஒவ்வொருவரும் ஒருவிதம். நியூயார்க் சப்வே மனிதர்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள்.

அன்று நடந்த போட்டியில் வடக்கு கரோலைனா மாநில பல்கலைக்கழக கூடைப்பந்து அணி வெற்றி பெற்றது.


Picture courtesy
http://www.pressherald.com

Tuesday, October 21, 2014

வாரஇறுதியின் டைரிக் குறிப்பு

வாரஇறுதியின் டைரிக் குறிப்பு
-------------------------------------------------

உள்ளூர் வானொலியில் Congresswoman "Renee Ellmers" கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒலிபரப்பாகியது.  நீங்கள் உங்கள் கணவரை எங்கே சந்தித்தீர்கள்?  வேலை பார்த்த இடத்தில் உங்கள் கணவரும்  நீங்களும் மேக் அவுட் செய்தீர்களா? என்பது வரை கேள்விகள்.   (அவர்கள் இருவரும் ஒரே மருத்துவமனையில் வேலை பார்த்தவர்கள். அங்குதான் அவர்கள் சந்திப்பு நடந்தது)
)

எல்லாவற்றுக்கும் மேலாக "கருத்தடையை விமர்சிக்கும் கட்சியில் இருந்துகொண்டு நீங்கள் என்ன கருத்தடை முறையை உபயோகிக்கிறீர்கள?"  என்பது வரையான கேள்விகள்.

American Idol - season 2 ல் இரண்டாவது இடம் பெற்ற Clay Aiken இப்போது இவரை எதிர்த்து போட்டியிடுகிறார்.
http://en.wikipedia.org/wiki/Clay_Aiken

***

அதே வானொலி நிலையத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளர் பகிர்ந்து கொண்ட மற்ற ஒரு செய்தி புதியதாக இருந்தது. நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட விருந்தினர்கள் தாமதமாக வந்தால் அவர்கள் "Hot Nose" கொடுக்க வேண்டும் . இல்லை என்றால் அவர்களால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது. அப்படி  Hot Nose"  கொடுக்க முடியாது என்று வந்த விருந்தினர்கள் திருப்பிப்போனதும் உண்டாம்.

" Hot Nose" என்பது மூக்கு சூடாகும்வரை , இருவர் மூக்கோடு மூக்கு உரசிக்கொள்வது.

**

பிழைத்திருப்பது அல்லது பிழைத்தலுக்காக சில சமரசங்களைச் செய்வது என்பது எப்போதும் வலி நிறைந்ததாகவே இருந்தாலும் அது தவிர்க்க முடியாததாய் சில நேரங்களில் அமைந்துவிடுகிறது.

சென்ற வார இறுதியில் இந்த ஊருக்கு புதிதாய் வந்து, எங்களுக்கு அறிமுகமான ஒரு குடும்பத்தைச் சந்திக்கச் சென்றோம்.  இதுபோன்ற தனிப்பட்ட புதிய சந்திப்புகளில் (இரு குடும்பங்கள் மட்டும்)  நான் *பல்லு‍+பக்கோடா * என்றளவில் எதையாவது கொறித்துக்கொண்டு இருப்பேன். இது உரையாடல்களைக் குறைத்துக்கொள்ள.

யார் என்ன என்னமாதிரியான குண்டுகளைப் போட்டாலும், அதைப்பிடித்து பத்திரமாகப் பக்கத்தில் வைத்துவிட்டு, "சாம்பார் ரொம்ப‌ நல்லாருக்கு , பொரியல் நல்லாருக்கு" என்று எளிதான பேச்சுக்களுக்கு மடை மாற்றிவிடுவேன். பெரிய குழுச்சந்திப்பு என்றால் ஒருவர் சரிப்பட்டு வரவில்லை அல்லது ஒருவரின் அலைவரிசை ஒத்துவரவில்லை என்றால் ஏற்கனவே அறிமுகமான வேறு யாரவாது ஒருவர் இருப்பார்கள். அவர்களுடன் பேசிப் பொழுதை ஓட்டிவிடலாம். 

இரு குடும்பங்கள் மட்டும் சந்திக்கும் முதல் சந்திப்புகளில் முடிந்தவரைக்கும் அமைதியாய் இருந்துவிட்டு வந்துவிடவே எல்லா முயற்சிகளையும் செய்வேன்.

நாங்கள் பார்த்த குடும்பம் உள்ளூரில் நடந்த ஒரு தீபாவளி விழாவிற்கு சென்றுவந்த அனுபவத்தைச் சொல்லிக்கொண்டு இருந்தார்க‌ள்.  பேச்சுவாக்கில் அந்தவிழாவில் அதிகம் கிந்திக்காரர்ளே உள்ளார்கள் என்றும், தமிழர்களுக்கு (அவருக்கு) கிந்தி தெரியாமல் போனதற்கு கருணாநிதிதான் ஒரே காரணம் என்ற ஒரு கேட்டுச் சலித்த அணுகுண்டைப் போட்டார்.

இது போன்ற தருணங்களில் என் மனைவி என்னை ஓரக்கண்ணால் பார்ப்பது வழக்கம். நான் சட்டென்று எழுந்துபோய் ஒரு அப்பளத்தை எடுத்து , கவனமாக கடிக்க ஆரம்பித்துவிட்டேன்.

அடுத்து உள்ளூரில் கட்டப்படும் ஒரு சிவன் கோவில் பற்றி அவர்கள் பேசினார்கள்.  தட்டில் சோறு காலியாகிவிட்டதால் எழுந்துபோய் சாம்பார் எடுக்கும் சாக்கில் சாம்பாரைக் கிண்டிக்கொண்டே இருந்து அந்த உரையாடலில் இருந்தும் கவனமாக தப்பித்தேன்.

எந்தப் பிரச்சனையும் இல்லாமல் சந்திப்பு இனிமையாக முடிந்தது.

#அப்படியே இதை மெயின்டன் செய்ய எண்ணம். 

***

அடுத்த நாள் நடந்த சந்திப்பு வேறு ஒரு குடும்பத்துடன். இவர்களுக்கும் எங்களுக்கும் பல வருடப் பழக்கம். இந்த நண்பரின் அலைவரிசை எனக்குத் தெரியும். சிலவற்றில் எனது நிலைப்பாடுகளும் அவருக்குத் தெரியும். எனவே இவரிடம் சில விசயங்களில் கருத்து சொல்வது வழக்கம்.

தேர்தலின் போது மோடியை ஆதரித்துப் பேசிவர் இவர். இவரிடம் மோடி பற்றி பேசவேகூடாது என்று இருந்தேன். ஆனால் அவராகவே, மோடிதலைமையில் இருக்கும் அரசும் வெளிநாட்டு வங்கிகளில் பணத்தை வைத்து இருக்கும் நபர்களின் பட்டியலை வெளியிட முடியாது என்று சொல்லிவிட்டதைச் சொல்லி  "ஏன் மோடி இப்படிச் செய்தார்?" என்று ஆரம்பித்தார்.

http://www.financialexpress.com/news/black-money-ram-jethmalani-accuses-narendra-modi-govt-of-protecting-culprits/1299539

"மோடி ஒரு சராசரி அரசியல்வாதி + மதவாதி. அவரிடம் இருந்து நீங்கள் வேறு எதை எதிர்பார்க்க முடியும் என்று நான் வாய்திறந்தேன்.  அவரோ "இல்லை இல்லை மோடி கெட்டிக்காரர்" என்று மோடி புராண‌ம் பாடி , "கிரிமினல்களுக்காக வாதாடும் ராம்ஜெத்மலானியெல்லாம் எப்படி மோடியைக் கேள்வி கேக்கலாம்?" என்றார்.

"ராம்ஜெத்மலானி  ஒரு வக்கீல் . கொலைகாரன் அடிபட்டால்கூட சிகிச்சை செய்யவேண்டியது எப்படி மருத்துவரின் தொழில் தர்மமோ அப்படித்தான் ஒரு வக்கீலின் தொழில்தர்மம். அதனால் அவர் அப்படி இருக்கிறார்.  கொள்ளையர்களைப் காப்பது அரசியல்வாதியின் தொழில்தர்மம். அதைத்தான் மோடியும் செய்கிறார்" என்றேன்.

அவருக்கு நான் மோடி பற்றிச் சொன்னதில் மனவருத்தம் போல. இல்லை இல்லை மோடி குஜராத்திற்கு மோட்சம் அளித்தார் என்ற‌ அடுத்த கட்டத்திற்குப் போனார். குஜராத்தில் இரண்டு வருடங்கள் குப்பை கொட்டி இருந்தமையால் எனக்கு அறிமுகமான (மோடிக்கு முன்காலம்) குஜராத்தைப் பற்றி அவருக்குச் சொன்னேன். கொஞ்சம் அமைதியானார்.

மோடி ஒரு குறிக்கோள் அற்ற அரசியல்வாதி. ஒபாமாவிற்கு Affordable health Care  ஒரு கனவுத்திட்டம் சரியோ தவறோ அவர் அதற்காக உழைத்தார். அப்படி ஒரு கனவுத்திட்டம் என்று மோடிக்கு உள்ள ஒன்றைச் சொல்லுங்கள் என்றேன். விடையில்லை அவரிடம். ஆனால் மோடி சிறந்தவர் என்று இன்னும் நம்புகிறார். 

#பிம்பங்களே வாழ்க்கை

*

அடுத்த கட்ட உரையாடலில், அம்மாவின் தண்டனை என்று பேச்சு சென்றது. "அம்மாவைவிட ஊழல் செய்த கருணாநிதியெல்லம் இன்னும் வெளியில்தான் இருக்கிறார்" என்ற வழக்கமான "நீயும் தானே செய்த" என்ற ர.ர   Vs உ.பி  பாணி கருத்தைச் சொன்னார். நாங்கள் சென்ற‌ வாகனத்தை அவர் ஓட்டிக்கொண்டு இருந்ததால் எதற்கு வம்பு என்று அமைதியாய் அந்த அலையைக் கடந்துவிட்டேன்.

***

அம்மாவின் வழக்கு சிறை மற்ற கட்சிகள்
--------------------------------------------------------
இதுவே ஏதோ ஒரு காரணத்தில் அய்யா கலைஞர் சிறை சென்று இருந்தால், அடுத்த கட்சித் தலைவர்களில் சிலர் நிச்சயம்போய் சிறையில் பார்த்து இருப்பார்கள். வைகோவிற்கும் அப்படியே  அவர் சிறையில் இருந்த போது மருத்துவர் அய்யா இராமதாசு உட்பட பலர் சென்று பார்த்தார்கள்  என்று நினைவு. அம்மா அவர்களுக்கு அப்படி நடக்காததற்கு காரணம் , இது ஊழல் வழக்கு என்பதைத்தாண்டி அவர் மற்ற கட்சிக்காரகளை நடத்தியவிதமும் காரணமாக இருக்கலாம்.

யாரும் பார்க்க வரவேண்டாம் என்று சொன்னது காரணம் என்றுகூடச் சொல்லலாம். ஆனால் எனக்கு அதில் நம்பிக்கையில்லை. அம்மா அவரின் அரசியல் நட்புகள் என்று யாரையும் அடையாளம் காண முடியவில்லை என்னால்.

அய்யா கலைஞர் அவர்கள் எதிர்கருத்து கொண்டவர்களை எதிரியாக வரித்துக்கொண்டதில்லை. அதுதான் அவரின் பலமும்கூட.

*

வருங்கால பிரதமர் சூப்பர் அவர்கள் அம்மாவிற்கு கடிதம் எழுதாவிட்டால்தான் பிரச்சனை. "பாரதீய சனதாவின் வருங்கால விடிவெள்ளி" என்று  அடுத்தவர்கள் பேசியபோது ஏதும் சொல்லாமல் அதை அப்படியே மெயின்டன் செய்தார். அம்மா வெளியில் வந்தவுடனும் அமைதி காத்தால் லிங்கா மங்கா ஆகிவிடும் என்று தெரிந்து அறிக்கை கொடுத்துள்ளார்.

முதல் போட்டவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் தாண்டி சூப்பருக்கு என்று சில கணக்குகள் உண்டு. சாதகமாய்ப் போகும்வரை கருத்து சொல்லமாட்டார்.இன்னும் கொஞ்சம் போகட்டும் என்று இருப்பார்.  பாதகம் என்ற தெரியவரும் அடுத்த நொடி தைரிய லட்சுமணன் அவதாரம் எடுத்துவிடுவார்.

*

சைக்கிள் , நீச்சல் மற்றும் பல விளையாட்டுகளில் உடலில் உள்ளாடை ஏதும் இல்லாமல் உடலை ஒட்டிய ஆடை அணிவது என்பது அந்த அந்த விளையாட்டின் தன்மைகளுக்காக மட்டுமே. அது ஒரு Technical தேவை. 

அந்த விதிகளின்படி இருந்தாலும் கொலம்பிய நாட்டின் பெண்கள் சைக்கிள் அணி செய்த ஆடை தேர்வு இப்போது சர்ச்சையாகி உள்ளது.

http://guardianlv.com/2014/10/columbia-womens-cycling-team-uniforms-a-controversy/

.

Friday, August 08, 2014

If you want to subjugate some one introduce religion

முனைவர் வேலு அண்ணாமலை


Tuesday, January 14, 2014

அனைத்து தமிழர்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்!

அனைவருக்கும் தமிழர் நிருநாள், உழவர் திருநாள், தமிழர் புத்தாண்டு என்ற சிறப்புகளைக் கொண்ட பொங்கல் வாழ்த்துகள். 

நீங்கள் எந்தக் கடவுளையும் இந்த விழாவில் சேர்த்துக்கொள்ளுங்கள், ஆனால் அடுத்தவர்கள் அவர்களின் மத/கடவுளைச் சேர்க்கிறார்கள் என்ற ஒரே கரணத்திற்காக இந்த நாளை ஒதுக்கிவிடவேண்டாம்.

சர்க்கரைப் பொங்கல் எந்தக் கடவுளுக்கும் பிடித்தமான ஒன்றே.

அனைத்து தமிழர்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்!


படங்கள்:  புருனோ  மற்றும் ஜோதிஜி பதிவுகளில் இருந்து.


கொறிக்க‌
பொங்கல்தான் புத்தாண்டா?
http://penathal.blogspot.com/2008/01/blog-post_24.html


புத்தாண்டு வாழ்த்துக்கள் - கலைஞரின் ராஜதந்திரம்!
http://penathal.blogspot.com/2008/04/blog-post_13.html

பொங்கல்தான் புத்தாண்டா?
http://penathal.blogspot.com/2008/01/blog-post_24.html

புத்தாண்டு வாழ்த்துக்கள் - கலைஞரின் ராஜதந்திரம்!
http://penathal.blogspot.com/2008/04/blog-post_13.html

பொங்கல் வாழ்த்து
http://kalvetu.balloonmama.net/2006/01/blog-post.html

அன்று நீங்களும் இருந்தீர்கள்!

"இதுவரை நான் சொந்தவீட்டில் இருந்ததே இல்லை" என்றான் எனது மகன்.  "நம்முடன் இருந்த அனைவரும் சொந்தவீடு வாங்கி போய்விட்டார்கள், நாம் மட்டும் என்னும் ஏன்?" என்ற கேள்விகள் குழந்தைகளிடம் இருந்து பல வருடங்களுக்கு முன்னரே வரத்தொடங்கிவிட்டது.  குழந்தைகள் உலக அளவு ஆசைப்பட்டாலும் , பொருளாதாரம் சார்ந்தே இத்தகைய முடிவுகள் எடுக்க முடியும். மேலும் தேவைகளுக்கும் ஆசைகளுக்குமான வேறுபாட்டை சமயம் கிடைக்கும்போது எல்லாம் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுத்தே வந்துள்ளேன். இன்னும் 5 வருடங்கள் கழித்து மூத்த மகன் கல்லூரி போய்விடுவான். "அப்பா கடைசி 5 வருடமாவது சொந்த வீட்டில் இருக்க வேண்டும்" என்று சொன்னான். எப்படியாவது இசைவு தெரிவிக்க வைத்துவிட வேண்டும் என்று பல அம்புகளை குழந்தைகள் இருவரும் எய்தவண்ணம் இருந்தார்கள்.

வெளிநாட்டு மண்ணில் வேலை பார்த்தாலும் , வரவிற்கு இணையான‌ செலவுடனே வாழ்க்கை ஓடுகிறது. குழந்தைகளின் விளையாட்டு பயிற்சிகளுக்காக மட்டும் வீட்டு வாடகை அளவில் பணம் செலவாகிவிடுகிறது. எல்லாம் நமது திட்டமிடல் மற்றும் விருப்பம் சார்ந்தது என்றாலும், "நித்தியகண்டம் நிறைய ஆயுள்" என்ற அளவில் திரிசங்கு சொர்க்கமாகவே வாழ்க்கை கடந்த 12 வருடகாலமாக இருந்துள்ளது. இன்னும் அப்படியே. குடியுரிமைப் பிரச்சனைகள், வேலை சார்ந்த நிலையில்லாத்தன்மை , என்று அமெரிக்க மண்ணில் இருக்கும் பலருக்கு பலவிதமான சிக்கல்கள் இருக்கும்.  வாடகை குடியிருப்பின் மாதவாடகையும் ஒருபுறம் ஏறிக்கொண்டேயுள்ளது.

பிரச்சனைகள் எல்லாம் தலைக்குமேல் போய்க்கொண்டே உள்ளது. "சரி இதற்குமேல் சாண் போனால் என்ன? முழம்போனால் என்ன?" என்று,   குழந்தைகளுக்காக சவாலை ஏற்றுக்கொள்வது என்று நானும் எனது மனைவியும் முடிவு செய்தோம். இருக்கும் சேமிப்பு கடனுக்கான ஆதார பணத்தைக் காட்டமட்டுமே உதவும் , 80 சதவீதம் வங்கியில் கடன்வாங்கி வீடு ஒன்றைக் கட்டலாம் என்று முடிவு எடுத்தோம். கடன் தொகை மற்றும் அதற்கான நடைமுறைகள் எல்லாம் மலைபோல் பயம்கொள்ளச் செய்கிறது.

வீட்டுக்கடன் அமெரிக்காவில் ஒருவரை முழுநேர பொருளாதார அடிமையாக மாற்றிவிடும். சொந்தவீடு  (அப்ப‌டி நினைத்துக்கொள்ளலாம்), ஏதேனும் ஒருமாதத்தில்  சரியான நேரத்தில் தவணைத்தொகை கட்ட தவறினால் , சுருக்கு இறுக்கப்படும். உடலை ஓய்வில்லாமல் வருத்தினால்தான் கடன் தொகையைத் தொய்வில்லாமல் கட்டிக்கொண்டு இருக்கலாம்.

ஆனால் இப்படியான கடன்களும், பொறுப்புகளுமே தினமும் காலையில் எழுந்திருக்க வைக்கிறது என்பதும் உண்மை.

***

அமெரிக்காவில் பொறுமையும் ,அதற்கான நேரமும், மற்ற வசதிகளை விட்டுக்கொடுத்தலும் இருந்தால் தவிர , பிடித்தமான வீட்டைக் கட்டிக்கொள்ள முடியாது. எங்காவது ஒரு அனாமத்தான கிராமத்தில், மாடு, கோழிகளுடன் வசிக்க நான் நினைத்தாலும், மனைவி குழந்தைகளின் விருப்பம் வேறுமாதிரி இருந்தது. குழந்தைகளுக்கு எது சிறந்த பள்ளி? அவர்களின் நண்பர்கள் அருகில் உள்ளார்களா? என்பது போன்றவை அவர்களின் கணக்குகள். சுற்றமும் அன்பும் சூழ இருக்கவேண்டும் என்றால், அதற்கான விலையையும் கொடுக்க வேண்டியுள்ளது. வீடுகளைக் கட்டி விற்கும் நிறுவனங்கள் கொடுக்கும் குறைந்தபட்ச வடிமைப்புகளில் இருந்து ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். காசு நாம் கொடுத்தாலும்,  நகர சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, நமக்குப்பிடித்த வீட்டின் வெளிப்புற வடிவமைப்பைக்கூட தேர்ந்தெடுக்க முடியாது.  பக்கத்தில் உள்ளவர் அதே வெளிப்புற வடிவமைப்பை ஏற்கனெவே தேர்ந்தெடுத்துவிட்டால், நாம் வேறு ஏதேனும் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

****

இவை எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் விட , என்னவென்றே தெரியாமல்  கைகொடுத்த உங்களின் அன்பு , வீடு எழுப்பப்படும் மண்ணில் கலந்துவிட்ட செய்தியை உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்.

ஆம் நேற்று நீங்களும் எங்களோடு இருந்தீர்கள்.

அமெரிக்காவில் ஒரு காலத்தில் வீடுகட்டுதல் என்பது ஒரு சமூக நிகழ்வாக இருந்துள்ளது.  http://en.wikipedia.org/wiki/Barn_raising விவசாயம் சார்ந்த பொருளாதார காலங்களில், ஒருவருக்கான பண்ணையைக் கட்டிக்கொடுத்தல் என்பது ஒரு சமூக நிகழ்வு. அனைவரும் அவர்களின் நேரத்தைக் கொடுதிருக்கிறார்கள். இன்றைய வாழ்க்கையில் அது எட்டாக் கனியாகிவிட்டது. ஒப்பந்த அடிப்படையில் பல நிறுவனங்கள் சேர்ந்து களத்தில் இறங்கும் இந்த கட்டுமான வேலையில், எல்லாவேலைகளும் முடிந்த பின்னரே வீட்டின் உரிமை , மாற்றிக்கொடுக்கப்படும் .அதுவும் நேரடியாக வங்கிக்கு அடமானப் பத்திரமாகப் போய்விடும்.

குறைந்தபட்சம் நம் ஆசைக்கு அந்த மண்ணை நோண்டி திருப்தி அடைந்துகொள்ளலாம்.  மண்ணிற்கு  கொடுக்கப்பட்ட மரியாதை என்பது , சாமி, பூசை என்று வெறும் சடங்குகளாக ஆகிவிட்டது. இந்த நிகழ்வை அர்த்தமான கொண்டாட்டமாக்க , மண்ணில் மரம் வைத்து ஆரம்பித்தேன் நேற்று.

புதியதொரு மரக்கன்றை வாங்கி, குடும்பத்தினர் அதற்கு நீர் ஊற்றி, புதிய வீட்டுவேலையைத் தொடங்கினோம். இந்த மரம், வீட்டு வேலைகள் முடிந்தவுடன் வீட்டின் பின்புறம் நடப்படும்.

நான் இல்லாவிட்டாலும்  , வெட்டி சாய்க்கப்படாதவரை,  இப்படி ஒரு நிகழ்வு நடந்தமைக்குச் சாட்சியாக இம்மரமும் இந்த பூமியில் இருக்கும்,  மனதிலும் , மண்ணிலும் கரைந்த உங்களின் அன்போடு.

பந்தக்கால் நடனும் ஒரு கை குடுங்க!
http://kalvetu.balloonmama.net/2014/01/blog-post_9.html

Thursday, January 09, 2014

பந்தக்கால் நடனும் ஒரு கை குடுங்க!

ப்பா அவசர அவசரமாக பள்ளிக்கு கிளம்பிக்கொண்டு இருப்பார். அல்லது "பனாமா" பிளேடு கொண்டு, பாதி இரசம் போன கண்ணாடியை, ஸ்டூலில் வைத்து, அதற்கு ஒரு சொம்பு (போநி) முட்டுக்கொடுத்து முகச்சவரம் செய்து கொண்டு இருப்பார். சரசரவென சத்தம் கேட்கும். சின்னாளபட்டு சேலையை கட்டிக்கொண்டு "அண்ணே முகூர்த்தக்கால் ஊன்றோம், ஒரு கை பிடிக்க வந்துருங்க" என்று பக்கத்துவீட்டு அக்கா அல்லது அத்தைமார்கள் வந்து சொல்லிச்செல்வார்கள். மாதம் ஒருமுறையாவது இது நடக்கும். என்ன அவசரம் என்றாலும், தட்டவே முடியாத ஒன்று. அப்பா வேகமாக வேலையை முடித்துவிட்டு , மற்றவர்களுடன் சேர்ந்து அந்த வீட்டு வாசலில் போய் நின்றுவிடுவார். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து, பக்கத்துவீட்டில் கூப்பிட்டு பந்தக்கால் நட அப்பா போகாமல் இருந்தது இல்லை.

அது என்னவோ தெரியவில்லை , ஆண்கள் மட்டுமே பந்தக்கால் நட அழைக்கப்படுவார்கள். ஆனால், பெண்களுக்கு தன் வீட்டு ஆண் அழைக்கப்பட்டதே ஒட்டு மொத்த குடும்ப அழைப்பு என்று பெருமிதமாக , அருகில் இருப்பார்கள். ஆண்கள் எல்லாம் பந்தக்கால் நட,  பெண்கள் மஞ்சள், குங்குமம் , என்று தட்டில் வைத்து அவர்களின் சடங்குகளைச் செய்து கொண்டு இருப்பார்கள். பந்தக்கால் தயார் பண்ணுவதில் பலருக்கும் பங்கு உண்டு. முக்கியமாக பந்தல்காரர். பந்தல்காரர்கள் இதற்கு என்றே சிவப்பு மற்றும் வெள்ளை வர்ணம் பூச‌ப்பட்ட உயரமான மூங்கில் மரங்களை வைத்து இருப்பார்கள். அப்படி இல்லை என்றால் வீட்டில் இருந்தே ஒன்றைத் தயார்செய்வார்கள். மூலையில் நடப்பட இருக்கும் மூங்கில் மரத்தின் உச்சியில் மாவிலை,தென்னம் பாளை, கூரைப்பூ, மஞ்சள்..இப்படி அவரவர் நம்பிக்கை மற்றும் அந்த நேரத்தில் கிடைக்கும் விவசாய பொருள்/தவரம்/பயிர் சார்ந்த ஏதாவது இருக்கும்.

பெண்கள் குழந்தைகள் அந்த மரத்திற்கு சந்தனம், குங்குமம் வைத்து தயாராக ஓரமாக சாத்தி வைத்து இருப்பார்கள். இதற்கு என்றே நல்ல நேரம் குறிக்கப்பட்டு இருக்கும். நேரம் குறிப்பதற்கு என்று சில தாத்தாக்கள் உண்டு. அவர்கள் மரம் நட கைகொடுக்க வரமுடியாவிட்டாலும், ஆயிரத்தெட்டு நொள்ளைகள் சொல்லிக்கொண்டு திண்ணை அல்லது கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்துகொண்டு அவர்களின் மகள், மருமகள், மகன், மருமகன், மனைவி என்று யாரின் தலையையாவது உருட்டிக்கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு அப்படித்தான் அன்பைக் காட்டத்தெரியும் என்று இப்போது எனக்குப் புரிகிறது.

அப்பா ஒவ்வொருமுறை போகும் போதும், "நம்மளும் பெரிய மனுசன் ஆகி இப்படி பந்தக்கால் நட அழைக்கப்படவேண்டும்" என்று எண்ணிக்கொள்வேன். பல அக்கா,அத்தைகள் "சின்னப் பசங்களையும் பிடிக்க விடுங்க " என்று சிபாரிசு செய்து, என் போன்ற சிறுவர்களையும் பெரிய ஆண்களோடு, அல்லக்கைகளாக பந்தக்கால் நட கைகொடுக்க தள்ளிவிடுவார்கள். அப்போதெல்லாம் அது ஒரு சாதனைபோல இருக்கும் .பெருமிதமாக எண்ணிக்கொள்வேன். பல நேரங்களில் அம்மா ஏதாவது மளிகைச் சாமான் வாங்க அருகில் உள்ள "போஸ்" கடைக்கு அனுப்பிவிடுவார்கள். "போஸ்" அண்ணனுக்கும் இப்படியான அழைப்புகள் வரும். கடையில் ஒற்றை ஆளாக இருந்தாலும்,  (அவரின் திருமணத்திற்கு முன்) "கொஞ்ச நேரம் கடையப் பாத்துக்கங்க‌" என்று கடைக்கு வந்த வாடிக்கையாளரை நிற்க வைத்துவிட்டுப் போய்விடுவார் பந்தக்கால் நட கைகொடுக்க.

பந்தக்கால் நடும் நிகழ்வில் யாரை அழைப்பது என்ற பெரிய விதிகள் ஏதும் கிடையாது. அக்கம் பக்கம் உள்ளவர்களை அழைப்பதுதான் நோக்கம். பல நேரங்களில் குழாயடி , கிணத்தடிச் சண்டைகள் காரணமாக சிலரை வேண்டுமென்றே தவிர்ப்பார்கள். பந்தக்கால் நட ஆரம்பிக்கும்போது , ரோட்டில் யாராவது பெரிய மனிதர்கள் வந்துவிட்டால், முன்திட்டம் ஏதும் இல்லாமல்கூட "அண்ணே நீங்களும் வாங்க" என்று அழைப்பார்கள். அழைத்தால் மறுக்க முடியாத ஒன்றாகவே இருக்கும். திருமணப்பத்திரிக்கை கொடுத்து , சம்பிரதாயத்திற்கு அதை வாங்கி வைத்துக்கொண்டு , முன்விரோதம் காரணமாக திருமணத்திற்கு போகாமல், வெறும் மொய் பணத்தை மட்டும் கொடுத்துவிடுவார்கள். ஆனால், பந்தக்கால் நட அழைக்கும்போது மறுக்க முடியாது. ஒருவேளை அழைக்கப்பட்டவர் போகமுடியாவிட்டாலும், வீட்டில் இருந்து யாராவது ஒரு பெரியவர் போக வேண்டும்.

அர்த்தம் பொதிந்த‌ பல பழக்கவழக்கங்கள் இப்போது சம்பிரதாயச் சடங்குகள் ஆகிவிட்டாலும் , பந்தக்கால் நடும் நிகழ்வு அதற்கான அர்த்தத்தை இன்றும் ஓரளவேனும் தன்னகத்தே கொண்டுள்ளது. பக்திமார்க்க சடங்குகள் சேர்ந்து கொண்டாலும், "என் வீட்டில் நடக்கும் ஒரு முக்கிய நிகழ்வில், என் அக்கம் பக்கமும் ஒரு பங்காளி" என்று சொல்வதே அந்த நிகழ்வின் நோக்கம். இரத்த உறவுகள் எல்லாம் பல ஊர்களில் இருப்பார்கள். அவர்கள் எல்லாம் திருமண‌த்தின் அன்றோ அல்லது அதற்கு சில நாட்களுக்கு முன்னரே தான் வருவார்கள். பந்தக்கால் நடுவது போன்ற நிகழ்வின் ஆரம்பகாலத்தில் , கை கொடுப்பவர்கள் அக்கம் பக்கம் இருக்கும் நண்பர்களே. மேலும் அவசரகால உதவிக்கு எப்போதும் கூப்பிடும் தூரத்தில் இருக்கும் , அக்கம் பக்கம் நண்பர்கள்தான் கைகொடுப்பார்கள். அப்படியான நண்பர்களை நம்வீட்டு நிகழ்வில் கைகொடுக்க வைப்பது, அவர்களுக்குச் செய்யும் மரியாதை மட்டும் அல்ல, "முக்கிய உரிமைகளை உனக்கும் கொடுக்கிறேன்" என்ற அர்த்தம் கொண்டது. பெண்களின் சடங்குகளில் , தாய்மாமன் வந்து குச்சு கட்டுவத்ற்கு முன்னரே, அக்கம் பக்கம் மாமாக்கள்,அண்ணன்கள்,தாத்தாக்கள் அனைவரும் சேர்ந்து பந்தக்கால் நட்டு இருப்பார்கள். மாமன் அதே ஊரில் வெட்டியா சுத்திக்கிட்டு இருந்தால்தான் வருவார்.

பந்தக்கால் நடும் நிகழ்வை நான் என்னளவில் சாதி,மத சம்பந்தம் இல்லாத , உறவுகள் தொடர்பு இல்லாத , அக்கம் பக்கம் நண்பர்களின் நிகழ்வாகவே  பார்க்கிறேன்.அய்யப்பசாமி, உள்ளூர் மாரியம்மா என்று எல்லாச் சடங்குகளையும் செய்யும் ஒருவர், அவரின் வீட்டு பந்தக்கால் நடும் நிகழ்வில் , பக்கத்துவீட்டு கறிக்கடை பாயையும் அழைத்து இருந்தார். பாய் அண்ணன் அவரின் லுங்கி, தொப்பி சகிதம் பக்திபழமாக வந்து, அல்லாவின் பெயரை உரக்கச் சொல்லிக்கொண்டே பந்தக்கால் நட கைகொடுத்தார்.

மனிதம் வாழ்க!

***

இந்தவார இறுதியில் முக்கியான ஒன்றை ஆரம்பிக்க உள்ளேன். பந்தக்கால் நடும் நிகழ்வு அல்ல , இருந்தாலும் உங்களின் அன்பும் சேர்ந்து கலக்க வேண்டிய நிகழ்வு

அக்கம் பக்கம் நண்பர்கள் இருந்தாலும். கூப்பிடும் தொலைவில் உள்ள பிளாக்,பிளஸ் போன்ற சமூகவலைத்தளங்களில் உள்ள என் நண்பர்களையும் பங்குகொள்ள அழைக்கிறேன். 

செய்யவேண்டியது இதுதான் உங்களின் கையை இங்கே கொடுங்கள், அதுவே நான் செய்ய இருக்கும் செயலில் அன்பாய் கலந்து, நீங்களும் பங்குகொண்ட ஒரு நிகழ்வாக எனக்கு இருக்கும்.

Thursday, January 02, 2014

என்னுடன் சகபயணியாக வந்து கொண்டு இருக்கும் அனைவருக்கும்...

பூமி எந்த ஒரு காலத்திலும் அது ஏற்கனவே இருந்த இடத்திற்கு திரும்பி வருவதே இல்லை. அதாவது 2013 ஜனவரியில் அது விண்வெளியில் இருந்த இடமும்,  இன்று 2014 ஜனவரியில் அது விண்வெளியில் இருக்கும் இடமும் முற்றிலும் வேறு வேறு.  சூரியனின் பயணத்தையும் கணக்கில் கொண்டால் , பூமியின் பயணம் ஒரு முடிவற்ற பயணம்.
 Image courtesy http://humansarefree.com

நிலா பூமியை மையமாக‌க்கொண்டும் , பூமி சூரியனை மையமாக‌க்கொண்டும், சூரியன் மில்கிவேயின் மையத்தைக் கொண்டும் சுற்றுகிறது....இப்படி போகிறது சுற்றுக்கணக்கு.


Earth is not revolving around the Sun (the way you think)!
http://humansarefree.com/2011/03/earth-is-not-revolving-around-sun.html

Earth's motion around the Sun, not as simple as I thought
http://www.youtube.com/watch?v=82p-DYgGFjI

Earth Rotation & Revolution around a moving Sun
http://www.youtube.com/watch?v=lkWyM-M8o0c

Earth Is Not Orbiting The Sun
http://www.youtube.com/watch?v=-NH5yK3ZN54

அதுபோல வடக்கில் காணப்படும் துருவ நட்சத்திரமும் மாறிக்கொண்டே உள்ளது.

//Thousands of years ago, when the pyramids were rising from the sands of ancient Egypt, the North Star was an inconspicuous star called Thuban in the constellation Draco the Dragon. Twelve thousand years from now, the blue-white star Vega in the constellation Lyra will be a much brighter North Star than our current Polaris.
Polaris could be a name for any North Star. Our current Polaris used to be called Phoenice
.//

Does the North Star ever move?
http://earthsky.org/space/north-star-movement

****

உயிரிகளின் பயணம் என்பது எக்காலத்திலும் பழைய நிலைக்கு திரும்ப முடியாத பயணம். பூமிப் பந்தில் இருந்து உதிர்ந்து விழுந்தால் மட்டுமே உயிரின் பயணம் நிற்கும்.

என்னுடன் சக பயணியாக வந்த நெல்சன் மண்டேலா, இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் போன்றவர்கள் இன்று இல்லை. பல இழப்புகள் இருந்தாலும் , ஆண்டின் இறுதிக் காலகட்டத்தில் நடந்த இவர்களின் இழப்பு அதிகம் மனச்சோர்வைத்தருகிறது.

*****

பூமி சூரியனை தொடர்வதால், சூரியனில் இருந்து கணக்கிடும்போது வருடக் கணக்கு சாத்தியமாகிறது. சற்று தூரவிலகிப் பார்க்கும்போது அதுவும் ஒரு ஒப்பீட்டளவு கணக்கு என்பது புலப்படும்.

வட்ட வடிவ ஓடுகளத்தில் ஓட்டத்தை ஆரம்பிக்க, உள்வட்டத்தில் ஓடும் வீரருக்கு ஒரு இடமும், வெளிவட்ட வீரருக்கு ஒரு இடமும் ஆரம்பமாக குறிக்கப்பட்டு இருக்கும். ஆனால் அனைவரின் நோக்கமும் ஒரு முடிவை நோக்கித்தான்.

Image courtesy http://www.portlandroadinc.com


அதுபோல எந்த நாளை ஆரம்பமாகக்கொண்டாலும் ஆரம்பித்த நாளில் இருந்து 365 நாட்கள் ஓடி முடிக்க வேண்டும். என்னுடன் சகபயணியாக வந்து கொண்டு இருக்கும் அனைவருக்கும், என் ப்ரியங்கள் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

.

கூகிள் தேடு பொறி மற்றும் யூட்யூஃப்ல் பாதுகாப்பான தேடலை முடுக்கிவிட‌There is nothing called absolute security or 100% secured. Such a thing like that doesn’t exists. Secured or security is a relative term.  Eventually all secured stuff are vulnerable to something , you are trying your best to keep away from the intruder/risk.

Secured: How far you are away from the risk, in other words, making it harder for the intruder to break through.

குழந்தைகள் பயன்படுத்தும் வலை உலாவிகளில் முடிந்த அளவு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வது நல்லது. எது தவறு எது சரி என்று சொல்வது இந்தப்பதிவின் நோக்கம் அல்ல.ஆனால் எந்த வயதில் எதை அறிமுகப்படுத்தலாம் என்று பெற்றோர்கள் முடிவு எடுக்கலாம். அதற்கான சில வழிகள்.

கூகிள் தேடு பொறியில் பாதுகாப்பான தேடலை நீங்கள் முடுக்கிவிடலாம். அதே சமயம் நீங்கள் முடுக்கிவிட்ட பாதுகாப்பான தேடலை மற்றவர்கள் மாற்றிவிடாமல் இருக்க நீங்கள் அதை பூட்டியும் வைக்கலாம். உதாரணத்திற்கு உங்களின் கூகிள் மின்னஞ்சல் abc@gmail.com  என்று கொள்வோம். நீங்கள் பாதுகாப்பான தேடலை நீங்கள் முடுக்கிவிட்டபின்னர், உங்களின் மின்னஞ்சல் abc@gmail.com  கணக்கின் வழியாக அதைப் பூட்டியும் விடலாம். மற்றவர்கள் அதை மாற்றமுடியாது.

SafeSearch: Turn on or off
https://support.google.com/websearch/answer/510?hl=en

****

யூட்யூஃபில் பாதுகாப்பான தேடலை முடுக்கிவிட மற்றும் அதைப் பூட்டி வைக்க.

Safety Mode
https://support.google.com/youtube/answer/174084?hl=en

Safe Searching with Google & YouTube
http://www.safekids.com/2013/07/11/safe-searching-with-google/

Monday, December 09, 2013

மெய்நிகர் உலகம் பொய்யில் வாழும் நான்

மிழ் பதிவுகள், கூகுள் கூட்டல் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட ஒரு உலகம் உள்ளது. மூளையைக் கழற்றி வைத்துவிட்டு மந்தைகளுடன் சேர்ந்துவாழ்தல் ( கூட்டமாக / குழுவாக‌)  என்ற விலங்குலக நெறிப்படி வாழும் இடம்.

உள்ளுரில் அடுத்த ஆண்டுக்கான பொங்கல் விழா சினிமாப் பாட்டு டான்ஸ்கள் அதாவது பின்னனியில் சினிமாப் பாட்டைப் போட்டுவிட்டு (காமரசம் சொட்டும் பாடல்கள்) அதற்கு குழந்தைகளை ஆடவிடும் சடங்கிற்கான ஒத்திகைகள் தொடங்கிவிட்டது.   "மம்மி பேரு ஜிம்மி அப்பனுக்கு சலாம் வைக்கனும்...." என்ற‌ ரீதியில் போகும் ஒரு  என்ற பாடலுக்கு ஆடவிருந்த என்மகளைக் காப்பாற்றி , ஒரு நாடகத்தில் சேர்த்துவிட்டாகிவிட்டது. குழந்தைகளை வைத்து நல்ல மேடை நாடகம் போடவேண்டும் என்ற தளரதா முயற்சியில் , வணிகச் சமரசங்கள் போல டமிள் சங்க சமரசங்களுடன் ஏதோ ஒன்று நடந்துகொண்டுள்ளது.

மகனை அவன் நண்பர்களுடன் சேர்ந்து இசைக்குழு அமைப்பதில் பெற்றோர்களின் சக்தி அனைத்தும் கரைந்துகொண்டு உள்ளது. பெற்றோர்களுக்கு இடையேயான பஞ்சாயத்துகள் , குழந்தைகளின் ஒழுங்கீனம் (இங்கே ஒழுங்கு என்பது , 40 வயது உள்ள பாடகர் சொல்லும் இசை  சார்ந்த விதிகளில் குழந்தைகள் ஒழுகுவது மட்டுமே) என்று தாவு தீர்ந்து , டவுசர் கிழிந்து , வீட்டில் சண்டையும் சச்சரவுமாக போய்க்கொண்டு உள்ளது.

டமிள் சங்கம் இல்லாமல் கலைச்சங்கம் என்ற‌ ஒரு அமைப்பும் உள்ளது இங்கே. அவர்கள் தமிழ் கலாச்சாரம் என்று டமிள் சங்கத்தைவிட கொடுமையாக  இருப்பவர்கள். காமப்படல்களை குழந்தைகளைவிட்டு ஆடவிடும் அழகில் அவர்கள் ஒருபடி மேல்.

காமத்தில் தவறு இல்லை. சினிமாவில் 40 வயது ஆடவனும் 20 வயது பெண்ணும் ஆடிய ஆட்டத்தை பெற்றோர்கள் மேடையில் ஆடினால் நல்லது. எந்த வார்த்தைகளுக்கு ஆடுகிறோம் என்றே தெரியாமல் குழந்தைகள் பலியாக்கப்படும் கொடுமையைப் பார்த்துக்கொண்டே உள்ளேன். கையறுநிலை அல்ல கழுத்தரு நிலை.  :((

**

"என்ன தாடியெல்லாம் வச்சு இருக்கீங்க?"

"விரதம்"

"என்ன விரதம் இந்த ஊரில்? அய்யப்பசாமியா (சும்மா கேலியாக கேட்டேன்)

"ஆமாம்" என்று குண்டைத்தூக்கிப்போட்டார்.

அதோடு அவர் நிறுத்தி இருந்தால் பரவாயில்லை " கொஞ்சநாளாவது நல்லவனா இருப்போம்.... " என்று சொல்லிவிட்டு சிரித்தார்.  அவரின் மனைவி கலச்சாரம் ,விரதம் என்று பேசிக் கொண்டு இருந்தார்.

பொறுக்க முடியாமல் பிளாக்குத்தனமாக (பேக்குத்தனமாக என்று படிக்கலாம்) சில குருத்துகளைச் சொல்லி,  அனைவரும் என்னை மிரட்சியாகப் பார்த்து......
.....மறுபடியுமா ? என்ற மனையிவின் அர்த்தமான பார்வையில் நிறுத்திக் கொண்டேன்.

********************

இங்கே புலம்ப என்ன கட்டுப்பாடு புலம்பி வைப்போம்.

வழக்கமாக வேலை செய்யும் (வாலண்டியர் கூலி) அரங்கில் ஃட்ராப்ட் ஃபீர் (draft beer) ஊற்றுவதில் நான் ஒரு பிஸ்து (பிஸ்கோத்து என்றும் வாசிக்கலாம்) , நான் ஊற்றும் அழகிற்கு என்றே தனியாக சன்மானம் வைப்பவர்கள் உண்டு. ஒருமுறை 4 டாலர் வரை ஒரே ஒருவரிடம் இருந்து கிடைத்தது. பாராட்டி பாராட்டி ஒவ்வொருமுறையும் கொடுத்தார்.

கள்ளுக்குடிப்பதும், பீர் குடிப்பதும், டுவைன் வயின் குடிப்பதும் பரிமாறுவதும் ஒரே விதம் அல்ல. அதே சமயம் இப்படித்தான் செய்யவேண்டும் என்ற இலக்கணமும் ஏதும் அல்ல. ஆனால் பழமைவாதிகளுக்கு அவர்களின் பழக்கம் சார்ந்து பரிமாறும்போது (ஊற்றும்போது) மகிழ்கிறார்கள்.

**

நம்ம கனவான்கள் இன்னும் குடிப்பதை, மனையியுடன் உடலுறவு கொள்வதை ஒரு ஒழுக்கக்கேடாக அல்லது கொலைக்குற்றமாகவே பார்க்கிறார்கள். சாமிக்கு மாலைபோடுபவர்கள் முதலில் நிறுத்துவது மது அடுத்து மனைவியிடம் இருந்து விலகி இருத்தல். ஏன் என்று புரியவில்லை. சாமிக்கு இது எல்லாம் ஆகாதா என்ன?

குடிப்பது தவறு சாமிக்கு ஆகாது என்றால் அதை ஏன் 300 நாளும் செய்துவிட்டு 65 நாள் மட்டும் தவிர்க்க வேண்டும். புரியவில்லை.  கக்கூஸ்போவது சாமிக்கு நல்லதா என்ன? மாலையும் கழுத்துமாக கம்மாக்கரையில் குத்தவைச்சு பீடி வளிக்கும் அய்யப்ப சாமிகளுடன் கூட்டாம்பீ போன சம்மூவத்தில் இருந்து வந்த‌ மக்கள் எப்படி அதைமட்டும் தவிர்க்க மாட்டேன் என்கிறார்கள். அதாவது மாலையைக் கழற்றிவிட்டு கக்கூஸ் போகும் நடைமுறை உள்ளதா என்ன?

*

வாழ்க்கை என்றால் என்ன என்பதை அவர்களுக்கான அளவுகோலுடன் அணுகுகிறார்கள். நான் பார்த்த வரையில் இவர்களுக்கு குடிக்கவும் தெரியவில்லை வாழவும் தெரியவைல்லை. வயிற்றில் அதிக அளவு தள்ளிவிட்டு ஸ்டெடியாக இருந்தால் குடிபயில்வான் என்று நினைத்துக்கொள்கிறார்கள். அதை 60 நாள் தவிர்த்துவிட்டால் பக்திப்பழம் என்றும் நினைத்துக்கொள்கிறார்கள். மேலும் சைவம் என்று சொல்லிவேறு சங்கறுக்கிறார்கள்.

நல்லாருங்க மக்கா.

"சைவம்" - என்பது மதம். அது "உணவுப் பழக்கம்" அல்ல‌
http://kalvetu.balloonmama.net/2011/01/blog-post.html

மலக்குடலுடன் இறைவனைத் தரிசிக்கலாமா?
http://kalvetu.balloonmama.net/2006/07/blog-post.html

Friday, November 08, 2013

எழுத்துரு: ஒரு இணைய மொண்ணையின் கடிதம்

ருத்தை கருத்தாக சொல்லிச்செல்லாமல் "இணையமொன்னீஸ்" , "அறிவாளிக்குமட்டுமே தெரியும் நான் போட்டிருக்கும் ஆடை" என்ற ரீதியில் பீடங்களில் அமர்ந்து கொண்டு , இணையத்தில் என்ன பேசினாலும் நீ "ஆசானோட (ஆசான் இத நீங்கள் சொல்லியபடி தமிங்கிலீசில் எழுதினால் நல்லா இருக்காது ) கதை படிச்சியா?" என்று கூசா தூக்கும் இரசிகர்களையும் வைத்துக்கொண்டு , பல குருத்துகளை இணையத்தில் கொட்டிவரும் அய்யா அவர்களின் குருத்தைப் ப‌டித்து , பேஸ்தடித்துபோன எந்த தகுதியும் இல்லாத ஒரு சராசரி இணைய‌ மொண்ணையின் குருத்து. உங்கள் கொல்லைப்புர வட்டம் இருக்கும் திசை நோக்கி கும்பிடு போட்டு, உங்களின் பூசாரிகளுக்கு காணிக்கை கொடுத்துவிட்டு புலம்பிகிறேன்.

ந்த ஒரு மொழியாகட்டும் அதன் எழுத்துகள் (வரி வடிவம்) அப்படியே காலம் முழுக்க இருக்கப்போவது இல்லை. தமிழகத்தில் கிடைக்கும் கல்வெட்டுகளை படிக்க அதற்கென பயிற்சி பெற்றவர்கள் தேவை....அதுவும் தமிழே என்றாலும்.  எனவே, எந்த எழுத்துருவும் காலத்தால் மாறத்தான் செய்யும். அதை தடுக்க முடியாது.  மேலும் அது மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக யாரும்  பொந்துமரபு சாமிகளிடம் வேண்டுதலும் வைக்கவில்லை.  இத்தகைய மாற்றங்கள் தடுக்க முடியாத ஒன்று ....நடந்துகொண்டே இருக்கும்.  அவை வளர்ச்சி அல்லது சீர்த்திருத்தம் பரிணாமம் போல,சிறிது சிறிதாக நடக்கும்.  தமிழில் நடித்த படம் சரியா போணியாகவில்லை என்று கவர்ச்சியாக தெலுங்கு சினிமாவில் நடித்து கல்லா கட்டப்போகும் நடிகையின் குருத்துபோல உள்ளது சிந்தனைச் சிற்பியின் குருத்து.  எழுதிய பொஸ்தம் கேரிபாட்டர் போல விற்கவில்லை என்றால், கேரிபாட்டரை தமிழ்படுத்தி கதை வியாபாரம் செய்யலாம். அதைவிடுத்து "தமிழை ஆங்கிலத்தில் எழுது" என்று குருத்துச் சொன்னால் எப்படி இணைய மொண்ணைகள் சும்மா இருப்பார்கள்? அவர்கள்தான் தற்குறிகள் , மொண்ணைகள் ஆயிற்றே? "அரசனின் ஆடை , அறிவாளிகளுக்கு மட்டுமே தெரியும். அப்படியான அறிவாளி சர்டிபிகேட் கிடைக்கும் ஒரே அக்மாரக் ஒரிஜினல் இடம் கொல்லைப்புரம் வாசகர் வட்டம்" ..... என்பதை விடாமல் மெயின்டன் பண்ணினாலும் உதவவில்லையே? என்ன செய்யலாம்?

மாற்றம் , வளர்ச்சி எல்லா மொழிகளுக்குமே பொதுவானது. தமிழும் விதிவிலக்கல்ல. மொழி என்பது ஊடகம். பேச்சாக , எழுத்தாக அதற்கேயான தனி வடிவம் உள்ளது. பல மொழிகள் ஒரே எழுத்துருக்களைக் கொண்டு, ஆனால் தனித்துவமான பேச்சுவழக்கைக் கொண்டுள்ளது.  இந்தி என்ற ஒரு மொழிக்கான தனி எழுத்துரு கிடையாது. devanagari என்ற ஒரு எழுத்துருக்களையே அது பயன்படுத்தி வருகிறது. சமஸ்கிரகம் தொடங்கி பல மொழிகள் இந்த எழுத்துருவைப் பயன்படுத்துகிறது. இன்றைய ஆங்கில எழுத்துரு என்பதன் மூலம் Anglo-Saxon இலத்தீன் என்று கலந்துகட்டி உள்ளது.

ரி விடுங்க  . குழந்தைகளுக்கு இரண்டு வரி வடிவம் இருப்பது அதுவும் தமிழுக்கு என்று தனி வரிவடிவம் இருப்பதுதான் பிரச்சனையா? உலகில் உள்ள எல்லா எழுத்துருக்களையும் ஆங்கில வரிவடிவம் கொண்டு எழுதிவிடலாம் இன்றுமுதல்.  சரி ஆங்கில வரிவடிவம் மட்டும் அப்ப‌டியே வாழ்ந்துவிடுமா என்ன? ஆங்கில‌ எழுத்துருக்களின் "மூலம்" இன்று உள்ள "நிலைமை" என்று அய்யாவிற்கு தெரியாதா என்ன? "அப்ப‌டியெல்லாம் இல்ல இணைய மொண்ணையே, தமிழ் நாளை இருப்பதற்கு உத்திரவாதம் இல்லை" என்ற வாதத்தை நீங்கள் வைக்கலாம். சரி  ".... நாளைதான் நீங்கள் இருப்பது உத்திரவாதம் இல்லையே இன்றைக்கே சொத்தை கோவிலுக்கு எழுதி வைத்துவிட்டு குழிக்குள் இறங்கிவிடுங்கள்...." என்று சொன்னால் உங்கள் இரசிக சிகாமணிகள் கோபப்படுகிறார்கள். "ஆச்சானைப் பற்றி நாக்குமேல்பல் போட்டு பேச என்ன தகுதி உள்ளது?" என்று. "சாரோட கத பொக் படிச்சியா , படிச்சியா ? சங்கத்துல மெம்பரா? என்று கேட்டு கடுப்படிக்கிறார்கள் சார். உங்கள் புனைவில் சேகர் செத்தால் என்ன செக்குமாடு சாணி போட்டால் என்ன? பொஸ்தகத்து வரிகளின் படிமத்தில் பலாச்சுளை இருந்தால் என்ன பல்லி இருந்தால் என்ன? அதை யார் பேசுகிறார்கள் அல்லது விமர்சிக்கிறார்கள். இங்கே பேசப்படுவது உங்கள் கிந்து குருத்துக்கான எதிர் குருத்து மட்டுமே. அதை உங்கள் கொல்லைப்புர வட்டத்திற்கு சொல்லுங்கள். உங்கள் கிந்து கருத்தை விமரசிக்கக்கூட பலாப்பழத்தோட வரிசையில் நிக்கனுமா என்ன? கிந்து குருத்து பலாப்பழத்தில் சுளைதேடும் வட்டத்திற்கு மட்டும் என்றால் கொல்லைப்புர வட்டத்தில் வித்திருக்கலாமே?

மிழில் இத்தனை எழுத்துகள் உள்ளன அதனால் தான் படிக்க முடியவில்லை  என்று எந்தக் குழந்தையும் என்னிடம் சொன்னது இல்லை. (நீ என்ன பிடுங்கினே எந்தனை குழந்தையிடம் பிடுங்கெனே என்று என்னைக் கேட்க வேண்டாம். எதையோ எங்கேயோ பிடுங்கிக் கொண்டுள்ளேன் என்று வைத்துக்கொள்ளுங்கனேன் கொல்லைப்புர இரசிகாஸ்). நான் எப்போதும் தமிழில் உள்ள மொத்த எழுத்துகள் என்று "உயிர்" எழுத்துகளையும் "மெய்" எழுத்துகளையும் மட்டும்தான் சொல்வேன் என் மாணவர்களிடம் . "உயிர்மெய்" எழுத்துகள் ஒரு சப்பை மேட்டர். பெருக்கல்போல பிள்ளைகள் பெருக்கிச் சொல்லிவிடுகிறார்கள்.  அதுவும் , சின்னச் சின்ன பாடலாக வாய்ப்பாடுபோல சொல்லித்தரும்போது பட்டென்று பற்றிக்கொள்கிறார்கள். எழுதுவதும் சிரமம் என்று இதுவரை யாரும் சொன்னதில்லை. சரி அதையும் தாண்டி தமிழில் இவ்வளவு எழுத்துகள் உள்ளது அதுதான் இங்கிலிபீசுக்கு மாற முக்கிய காரணம் என்று அய்யா குறி சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். சார் நீங்க சீன மாண்டெரின் எழுத்துகளையும் பாருங்க சார். 80,000 எழுத்துகள் உள்ளது என்கிறார்கள். பல எழுத்துகள் இப்போது நடைமுறையில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எந்த கொல்லைப்புர வட்ட சங்கமும் அதை ஆங்கில எழுத்துருவில் எழுதலாம் என்று சொல்லவில்லை. இத்தனைக்கும் தமிழ்நாட்டைவிட அதிகம் அம்பேரிக்காவுடன் தொழில்ரீதியான உறவில் இருப்பவர்கள் சீனர்கள்.

மிழ், ஆங்கிலம் அத்துடன் இன்னொரு மொழி என்று சுலபமாக கற்கிறார்கள் குழந்தைகள். கிந்து போன்ற பொதுவான ( not like local கொல்லைப்புர வட்ட குருத்துகள்) அதிக வீச்சுள்ள பத்திரிக்கைகளில் எழுதும் முன்னர் , குழந்தைகளின் பன்மொழித்திறன் குறித்து அதற்கான அறிஞர்களிடம் கேட்டு எழுதலாம். சும்மா ஊட்டியில் ரூம் போட்டு என்ன சொன்னாலும் சொக்கிப்போகும் இரசிகர்களிடம் பேசுவதுபோல் இங்கேயும் எழுதினால் என்ன செய்வது?  தமிழ்நாட்டில் தமிழ் வாசிப்பு குறைந்துபோகக் காரணம், எழுத்துரு என்று என்று எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?

கற்றதை பயன்படுத்த சரியான தளங்களை குழந்தைகளுக்கு ஏற்படுத்த மறந்துவிட்டோம்.

தை பொஸ்தகங்களில் உங்களின் திறமை குறித்தான விமர்சனமே அல்லது இது. எல்லாரையும்போல நீங்களும் தமிழ் எழுத்துருவின் பயனர்.  கார் ஓட்டுபவன் எல்லாம் கார் மெக்கானிக் அல்லவே? காரின் கட்டுமானம் குறித்து மெக்கானிக்கிற்கு ஓரளவு தெரியும். ஆனால் தடாலென்று "ரயிலை ரோட்டிலும் ஓட்டலாம் கார் போல" என்று கிளம்பினால். அறிவு போதமை என்று சொல்லக்கூடாதா என்ன? "இந்த விசயம் இவருக்கு தெரியாது. அதில் அவ்வளவு ஞானம் இல்லாதவர்"...... என்று சொல்வது தனிமனித தாக்குதலா என்ன? மடவாசிகள்போல் பீடத்தில் அமர்த்தி என்ன சொன்னாலும் சரி என்று சொல்லவேண்டுமா என்ன? . நான் சொல்வது "இந்த நபருக்கு இந்த விசயத்தில் போதிய அறிவு இல்லை" என்றுதான் சொல்கிறேன். இவர் இந்த விசயத்தைப் பேசவே கூடாது என்று அல்ல. "நான்  இப்படி 'ka' தட்டினால் எனது கணினி யந்திரம் "க"  காட்டுவதால் எல்லா இரசிகர்களும் இனிமேல் தமிழ் 99 போன்ற உள்ளீடுசமாசாரங்களை விட்டுவிட்டு என்னைப்போல் , எனக்கு மட்டும் சாமியாடி என்னை தொழுது பிழைத்து வாழவும்......" என்று சொன்னால் கேட்டுச்செல்ல நான் என்ன மடவாதியல்லவே? சராசரி இணைய மொண்ணையாயிற்றே என்ன செய்வது?

ப்படித்தான் பேசுவார்கள் என்பது தெரியும், இவர்கள் இப்படித்தான் என்று முன்முடிவுகளோடு விடைகளை வைத்துக்கொன்டு கேள்வி கேட்கிறீர்களோ என்ற சந்தேகம் இணையமொண்ணையான எனக்கு வருவதை தடுக்க முடியவில்லை. தயார் செய்ய‌ப்பட்ட விடைகளுக்கு வெறும் மின்னஞ்சல்மூலம் கேள்விகளைப் பெற்றுக்கொண்டு,  கோபால்பல்பொடி முதல் கோமேதகம் வரை எல்லாக் கேள்விகளுக்கும் பொந்துஞானமரபில் தேய்த்து எடுக்கப்பட்ட களிம்பு விடைகளைக் கொடுத்துக்கொண்டு இருப்பவரிடம் எப்படி உரையாடல் சாத்தியமாகும்?  விவாதம் and/or  உரையாடல் என்பது சம நிலையில் இருக்கும் இருவருக்கு இடையில் இருக்க முடியும். பீடத்தில் இருந்துகொண்டு சொல்வது உரையாடலா போதனையா?  உங்களிடம் இரசிகர்மன்ற உறுப்பினர்களும், புனைவுகள் மூலம் பெற்ற ஊடக ஒலி பெருக்கியும் உள்ளது என்பதற்காக எதையாவது சொல்லிகொண்டு இருந்தால் என்ன செய்வது? இணையமொண்ணைகள் அவர்லள் பங்கிற்கு புலம்பி வைக்கிறார்கள்.

ணையமொண்ணைகள் பொங்கல் வைப்பது நீங்கள் சொல்லும் கருத்துக்களுக்காக மட்டுமே. கருத்துசொல்லும் உரிமையின்மீது அல்ல. கதை எழுதுவதை தொழிலாக செய்து வரும் ஒருவரை , அந்த தொழில் செய்கிறார் என்பதற்காகவே என்ன சொன்னாலும் ஆதரிப்பது /எதிர்ப்பது  என்பது நடிப்பதை தொழிலாக செய்து வரும் டாக்டரு விஜயின் கட்டவுட்டிற்கு பால்பாக்கெட் பீச்சுவவது/எதிர்ப்பதைவிட‌ ஆபத்தானது. மன்னிக்க வேண்டும். புனைவுகள்மீது எனக்கு என்றும் ஈர்ப்பு இருந்தது இல்லை.  அது எனக்குத் தெரியாது. கனவில் (புனைவில்) கழுதை செத்தால் என்ன பிழைத்தால் என்ன என்று இருந்துவிடுவேன்.  அதில் பேசி ஒன்றும் ஆகப்போவது இல்லை. அதே சமயம் அதை நிராகரிக்கவும் மாட்டேன். தமிழின் வளர்ச்சியில் எல்லாம் ஒரு அங்கமே.

னது கதை என்னும் புராடக்டை தமிழ் எழுத்துரு என்னும் ஒன்றில் சமைத்து, அது கேரி பாட்டர் போல் விற்கவில்லை என்றவுடன், தமிங்கிலீசில் தயார்  செய்து விற்றால் நிறைய விற்குமே என்று ஆசைப்படுகிறீர்கள்.  புனைவுகள் தமிழ் எழுத்துருவில் கதை புத்தகமாகிறது. இந்த எழுத்துரு செத்தாலும் வேறு ஏதோ எழுத்துருவில் கதை விற்கமுடியும். பரோட்டோ மாஸ்டருக்கு பரோட்டா  அதிகம் விற்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். எந்த நடிகையை நடிக்க வைத்தால் படம் அதிகம் விற்கும் என்று தயாரிப்பாளர் திங் பண்ணலாம். எந்த ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் புதிய மொபலை அறிமுகப்படுத்தலாம் என்று ஒரு நிறுவன முதலாளி திங் பண்ணலாம். வணிகத்தில் இதெல்லாம் சகசம். ஆனால் தன் கொல்லைப்புர விசுவாசிகள் ஆசான் என்பதை தமிங்கிலீசில் அடித்தால் எப்படி இருக்கும் என்பதையும் சிந்திக்க வேண்டும் நீங்கள். எது சொன்னாலும் அதிருதுல்ல...ஆம் தகரங்கள் அதிரத்தான் செய்யும் கனமான கருத்து இல்லை என்றால்.

ரோட்டா மாஸ்டரும் "இங்கே சூடான பரோட்டா" கிடைக்கும் என்று தமிழ் எழுத்துருவில் எழுதி,  வெளியே தட்டி வைத்து விற்கிறார்.
இங்கே அவர் பரோட்டா தான் விற்க முய‌ல்கிறாரே தவிர தமிழ் வளர்க்க முயலவில்லை. இதே பரோட்டா கடை வேறு நாட்டில் இருந்தால் வேறு மொழியில் எழுதி வைத்து இருப்பார்.  கதை விற்பனையாளர்களும் கனவு புனைவு என்று எழுதி அதை விற்கிறார்கள். அவர்களின் கனவு புனைவு பொரோடக்ட்களை எழுதும் மொழி/வரிவடிவம் தமிழ் . தமிழ் நாசமாகப்போனாலும் அதே கனவு புனைவு பொரோடக்ட்களை வேறு மொழியில் எழுதிக்கூட சந்தைப்படுத்த முடியும். அவர்களின் சரக்கை சந்தைக்கு எடுத்துச்செல்ல எந்த எழுத்துருவும் சரி. அதற்காக எங்கள் சங்கை அறுக்க வேண்டாம் என்றுதான் கேட்டுக்கொள்கிறோம்.

***

தமிழால் நீங்களும் பிழைக்கிறீர்கள் , உங்களால் தமிழும் செழுமை அடைகிறது. இரண்டும் உண்மை.  பயன்பாடு இல்லாவிட்டல் மொழி சாகும்.  இப்படி ஒரு மொழியும் எழுத்துருவும் இல்லாவிட்டால் இதை வசப்படுத்த தோன்றியிருக்காது என்பதும் உண்மை. ஆனால் கனவுகளை புனைவுகளாக அழகாக எழுதத் தெரிந்த காரணத்தினால் , உங்கள்  வணிகம் சரியில்ல என்பதால் இப்படி "தமிங்கிலீஃச் எழுத்துருவில்  எழுதினால் என்ன?"  என்பது மாதிரியான கருத்துகள்,  மொழியை எப்படி செழுமைப்படுத்தும்?

மேலும் இணையம் என்பது இணைத்தல் மட்டும் அல்ல இணை யானவர்கள் என்ற ஒரு எண்ணம் கொண்டோர் பழகும் இடம். இதில் நீங்களும் ஒருவர் என்ற எண்ணம் வேண்டும். அப்போதுதான் உரையாடல் சாத்தியமாகும். பாப்புலர் கதை விற்பனயாளர் போன்ற தொப்பிகளுடன்  வலம்வரும்வரை மற்றவர்கள் இணைய மொண்ணைகளாத்தான் தெரிவார்கள். ஏன் என்றால் யாரும் இங்கே அவர்களின் தொழில் சார்ந்த உன்னத தொப்பிகளை அணிந்து திரிவது இல்லை.