Thursday, May 18, 2006

தேர்தல் அலசல்3: கலைஞர் இன்னும் கலைஞரா?

ன்னும் எத்தனை காலத்துக்குத்தான் கலைஞர் கலைஞராகவே இருப்பது?

கலைஞன் என்பவன் யார் ? கலைஞன் என்பவன் ஒரு கலையில் வித்தகன்.அது எந்தக் கலையாக இருந்தாலும் சரி. கட்டடக் கலைஞன்,புகைப்படக் கலைஞன்,சினிமாக் கலைஞன் என்று பல.இந்தக் கலைஞர் எதில் வித்தகர்? அரசியலா? சினிமாவா? அல்லது சாணக்கியத்தனதில் வித்தகரா? அல்லது குடும்பத்தை கட்டிக்காத்து அனைவரையும் நல்ல வசதியான நிலையில் அமர்த்துவதில் வித்தகரா? எனக்கு என்னமோ இவர் பல்கலைக் கலைஞராகவே தோன்றுகிறது.

திரைத்துறையில் கண்ணம்மா வரை வசனம்,பாடல்,இலக்கியத்தில் தொல்காப்பிய பூங்கா,அரசியலில் 5 வது முறையாக முதல்வர்,குடும்பத்தில் அனைவரையும் நல்ல நிலைக்கு கொண்டுவந்த நல்ல அப்பா,மாமா மற்றும் தாத்தா (மு.க முத்து எப்படி சோடை போனார்?) .இப்படி இன்னும் அடுக்கலாம்.இவர் இதில் எல்லாம் வித்தகர்/கலைஞர்.இந்த வித்தகத்தன்மையால் யாருக்கு இலாபம்? இன்னும் எத்தனை காலத்துக்கு கலைஞராகவே இருந்து இலாபம் அடந்த்தவர்களே மேலும் மேலும் இலாபம் அடையப் போகிறார்கள்? 82 வயதாகும் கலைஞரே நீங்கள் கலைஞராக இருந்து இதுவரை சாதித்ததும், சறுக்கியதும் போதும்.மதுரையில் தன் கட்சிக்காக உழைத்தவன் படுகொலை செய்யப்பட்ட போதும் சரி,கேபிள் டி.வி க்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டம் கொண்டு வந்தபோதும் சரி நீங்கள் காட்டிய குடும்ப பாசம் உலகமே அறியும்.இப்போதும் உங்களால் குடும்பத்தை மீறி ஒரு எதுவும் செய்ய முடியாது என்றே தோன்றுகிறது.

நீங்கள் இந்த வட்டத்தை விட்டு வரவேண்டும். உங்களிடம் தமிழகம் நிறைய எதிர்பார்க்கிறது. உங்களின் கட்சி அரசியல்,குடும்பப் பாசம் எல்லாவற்றையும் தாண்டி உங்களிடம் நாங்கள் அதிகமாக எதிர்பார்க்கிறோம்.உங்களிடம் தலைமைப் பண்புகள் இருக்கிறது.தமிழில் நல்ல புலமை இருக்கிறது.என்னதான் ஜெயகாந்தன்களும் ,ஜெயமோகன்களும் ஒத்துக் கொள்ளாவிட்டாலும், நீங்கள் இந்த நூற்றாண்டின் தமிழ்த்தாயின் செல்லப்பிள்ளைகளில் ஒருவர் என்பதை மறுக்க முடியாது.

நீங்கள் இப்போது நாத்திகம் என்னும் செத்த பாம்பை அடிப்பதாக பேசுபவர்களுக்கு, நீங்கள் இளமைக் காலங்களில் உயிருள்ள பாம்பை கையில் பிடித்த கதைகள் தெரிய வாய்ப்பு இல்லை.அல்லது மறந்து இருக்கலாம்.அப்படிப் பிடித்ததால்தான் நீங்கள் இந்த நிலைமையை அடைய முடிந்துள்ளது.உங்களின் அந்தக்கால உழைப்புகள்தான் இன்று யாரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் போட வைத்துள்ளது.அதுவும் உங்களின் கைகளால் சட்டம் இயற்றப்பட்டது எங்களுக்கெல்லாம் பெருமை.என்ன வருத்தம் என்றால் தமிழன், தனது நாட்டில் உள்ள கோவில்களுக்கு போவதற்கும் ,கருவறை உரிமை கொண்டாடவும் சட்டம் போட வேண்டிய நிலை.தேவதாசி முறையை ஒழிக்க அரசு சட்டம் போட்டபோது ஒரு பெரியவர் "இது புனிதமான கடவுள் சேவை" என்று சொல்லி தடுக்கப் பார்த்ததும், இன்றும் உடன்கட்டை ஏறுவதை புனிதமாக கருதும் அரைவேக்காட்டு மடங்களும் இன்னும் இங்கே உள்ளது.

அந்தக் கும்பல்களுக்கு ஒடுக்கப்பட்டவனின் வலி தெரியாது.இந்தச் சட்டம் யாருக்கு இலாபமோ இல்லையோ தமிழகத்தில் பீடித்துக் கிடக்கும் கோவில் கருவறைத் தீண்டாமைக்கு ஒரு சாவு மணியாகவே பார்க்கிறேன்.இது வரவேற்கப்படவேண்டியது.

இருந்தாலும் என்னால் இந்தக் கேள்வியைக் கேட்காமல் இருக்க முடியவில்லை.உங்கள் கட்சியில் யார் வேண்டுமானாலும் கட்சியின் தலைவராகவோ,கட்சி சார்பாக முதல்வராகவோ வர முடியுமா?உங்கள் குடும்பம் தாண்டி வேறு யாரையாவது தலைவர் அல்லது முதல்வர் பதவிக்கு நீங்கள் அடையாளம் காட்ட முடியுமா? அப்படிச் செய்தால் நல்லது.இல்லையென்றால் சுழற்சி முறையிலாவது ஏதேனும் செய்ய முடியுமா? இதற்கு உங்களின் பதில்"பொதுக்குழு முடிவு செய்யும்" என்றால் அதை நம்புவதைத் தவிர வேறு வழியில்லை.

நீங்கள் வகுத்த தவறான முன்னுதாரணத்தால் இப்போதும் எதிர்க்கட்சித் தலைவர்கள் சட்டமன்றம் செல்லுவதில்லை.இரண்டாம் மட்ட தலைவர்களை நியமித்து விடுகிறார்கள்.முதல்வர் பதவி என்றால் நான் எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்றால் இரண்டாம் கட்ட தலைமை என்பது தமிழகத்தில் இனி ஒரு எழுதப்படாத சட்டமாகவே ஆகிவிடும்.

ந்த அரசியல் குப்பைகள் கிடக்கட்டும்.இப்போது நீங்கள் நினைத்தால் திராவிடக் கொள்கைகள் எல்லாவற்றையும் உங்களின் கையெழுத்துகளில் சட்டமாக மாற்ற முடியும்.தமிழ் திராவிடத்தை தாண்டி அடுத்த பரிணாமத்தை அடைந்து பல வருடங்களாகி விட்டது.தமிழ் பல நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக உள்ளது.இது எந்த இந்திய மொழிகளுக்கும் கிடைக்காத சிறப்பு.இந்த நிலையில் நாம் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டி சமஸ்கிருதம் போன்ற பேச்சு வழக்கு ஒழிந்த மொழிகளுடன் போட்டி போடாமல், தமிழை வேறு தளத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும்.

இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் உங்களுக்கு நன்கு தெரிந்த கலைகளில் கலைஞராக இருந்து, மேலும் மேலும் பயன்களை அந்த வட்டத்திற்கு மட்டுமே அளிக்கப் போகிறீர்கள்?

தமிழ்த் தாத்தவாக மாறுங்கள்:
தமிழ்,தமிழர் வாழ்க்கை போன்றவற்றை ஆராய்ச்சி செய்யவும், அதை ஆவணப்படுத்தவும் ஒரு நிரந்தர, ஆக்க பூர்வமான அமைப்பை ஏற்படுத்துங்கள்.சோற்றால் அடித்த பிண்டமாகிய நாங்கள் இலவச டி.வி யிலும், அரிசியிலும் குங்குமம் தரும் ஓசி சாம்பூவிலும் காலத்தை ஓட்டி விடுவோம்.ஆனால் தமிழ்? அது அப்படி இல்லையே உங்களுக்குப் பின்னால் தமிழ் வரலாறு தெரிந்த எந்த அரசியல் தலைவர்களும் இனிமேல் தோன்றப் போவது இல்லை. அரசியல் ,குடும்பம் போன்ற அனைத்து விவாதப் பேச்சுக்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு தமிழ்த் தாத்தவாக மாறுங்கள்.திராவிடம் பேசும் பொதுச் செயலாளர் ஓட்டுப் போடாதவனை திட்டும் அளவுக்கு போய்விட்டார்.இப்போது உள்ள அரசியல் தலைகள் அனைவருக்கும் இனிமேல் இந்த 5 வருட அரசியல் ஆட்சிக் கூட்டணிக்கு பேரம் பேசவே நேரம் இருக்காது.ஒரு முக்கியமான தலைமுறையின் கடைசித் தலைவராகவே உங்களைப் பார்க்கிறோம்.நீங்கள் வைத்த வள்ளுவன் சிலை கேட்பாரற்றுக் கிடக்கிறது. அங்கிருந்து உங்களின் தமிழ்ப் பணி மீண்டு(ம்) தொடங்கட்டும்.

மூத்த விவசாயியாக மாறுங்கள்:
என்னதான் கடனை இரத்து செய்தாலும்,அதிக விலையில் நெல் கொள்முதல் செய்தாலும், இவை எல்லாம் தற்காலிகத் தீர்வுகளே என்பது உங்களுக்குத் தெரியாதது இல்லை.ஆற்று மணல் திருடர்களையும், கண்மாய் ஆக்கிரமிப்புக் காரர்களையும் உங்களால் எதாவது செய்ய முடியுமா? கிராமங்களில் நீர்பிடிப்பை பெருக்க புதிய குளங்கள் அமைக்க வேண்டும்.இருக்கும் குளங்களை தூர்வாரி மக்களுக்கு நிரந்த நன்மை செய்யவேண்டும்.என்னதான் கார் தொழிற்சாலைகளைக் தமிழகத்திற்கு கொண்டு வந்தாலும், நமது வாழ்வியல் ஆதாரமாகிய விவாசாயம் அழிந்து போக விடக்கூடாது.

நல்ல வழிகாட்டியாக மாறுங்கள்:
இந்த வயதிலும் உங்களின் உழைப்பும்,காலையில் 4 மணிக்கே எழுந்து பல வேலைகளைச் செய்யும் அயராத சுறுசுறுப்பும் இன்று தமிழகத்தில் யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.யாரும் அழைக்காவிட்டாலும் நீங்களாக மாதம் ஒரு கல்லூரி/பல்கலைக் கழகங்கள் என்று தேர்ந்தெடுத்து மாணவர்களிடம் பேசுங்கள்.மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருங்கள்.எந்த அரசியல் தலைவர்களும் இதைச் செய்வது இல்லை.செய்ய நினைப்பதுகூட இல்லை.மாணவர்களிடம் உங்கள் உழைப்பின் இரகசியத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.கல்லூரிகளில் இருக்கும் அரசியல் சாயம் பூசப்பட்ட மாணவர் இயக்கங்களுக்குப் பதிலாக நல்ல குழுக்களை ஊக்குவிக்கவேண்டுமானால் பொது வாழ்வில் உள்ள, உங்களைப் போன்ற தலைவர்கள் வழிகாட்ட வேண்டும்.

****************


****************

2 comments:

  1. அவருக்கு இதுக்கெல்லாம் நேரமில்லீங்கோ..

    ReplyDelete