Saturday, October 27, 2007

கம்யூனிசம்-காந்தியம்-நாடி ஜோதிடம் மற்றும் பக்கவாட்டு நவீனத்துவம்

யணம் செய்யும் கப்பலில் ஒரு ஒட்டை இருப்பது தெரியவருகிறது. அந்த ஓட்டையின் விபரீதம் கப்பலின் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்பவனுக்கும், முதல் வகுபில் பயணம் செய்பவனுக்கும் வெவ்வேறுவிதமாகத் தெரியவரும். எவன் முதலில் சாகப்போகிறான் என்ற அளவில் வித்தியாசப்படும் அவ்வளவே. அடிப்படையில் அந்த கப்பலில் பயணம் செய்யும் அனைவருக்கும் பிரச்சனை ஒன்றுதான்.


எப்படி கப்பலின் ஓட்டையை அடைப்பது?
என்று.
 • ஒருவர் கம்யூசனிச சாந்து கொண்டு பூச வேண்டும் என்று சொல்கிறார்.
 • மற்றவர் காந்திய சாந்து கொண்டு பூச வேண்டும் என்கிறார்.
 • மேல் வகுப்பில் பயணம் செய்பவன் "எங்கே ஓட்டை ? எல்லாம் நல்லாத்தானே இருக்கு ? " என்று கூட சொல்லலாம். அது அவனின் புரிதல். பிரச்சனை உள்ளது என்றே தெரியாத இவனை ஆட்டையில் சேர்க்கவே முடியாது.

பிரச்சனை உள்ளது என்பதை ஒப்புக்கொண்டு, அதை எப்படி தீர்ப்பது என்று முன்வரும் குழுக்களில் அணுகுமுறை எப்படி அமைகிறது? அவனவன் அவனுக்குத் தெரிந்த ஒரு இசத்தையோ , மதத்தையோ அல்லது அரசிலையோ எடுத்துக்கொண்டு ஓட்டையை அடைக்க வந்துவிடுகிறார்கள்.

எந்த ஒரு இசங்களையும் படித்து அதன் உதவியுடன் நமது அறிவை கூர் தீட்டப்பயன்படுத்த வேண்டுமே தவிர, அந்த இசங்களையே நாமாகக் கற்பனை செய்து நாமும் அதுவாகி , சுய அடையாளங்களைத் துறத்தலால் வரும் பயன் ஏதும் இல்லை. பழைய தத்துவங்கள் ,இசங்கள் புதியவற்றைச் சமைக்க ஒரு கருவியாக இருக்க வேண்டுமே தவிர அதுவே, சர்வரோக நிவாரணியக Dr.காளிமுத்துவின் தாது புஷ்டி லேகியம் போல், கக்கூஸ் பிரச்சனையில் இருந்து கைப் பிரச்சனைன வரைக்கும் ஒரே மருந்தே தீர்வு என்று இருக்க முடியாது.

 • கம்யூனிசச் சாந்து கப்பல் X ஐ அடைக்கப் பயன்பட்டு இருக்கலாம்.
 • காந்தியச் சாந்து கப்பல் Y ஐ அடைக்கப் பயன்பட்டு இருக்கலாம்.

அதற்காக கப்பல் A க்கும் அதுதான் தேவை என்று அடம்பிடிக்காமல், நிகழ்காலப் பிரச்சனைக்கு தீர்வாக புதிய சிந்தனைகள் வளரவேண்டும். கம்யூனிசம் அல்லது காந்தி சொன்னார் என்பதற்காக கடிவாளத்தைக் கொண்டு காரை ஓட்ட நினைக்கக்கூடாது. கடிவாளத்தை அடிப்படையாக அல்லது உதாரணமாக வைத்து காருக்கு ஒரு தீர்வு காண முற்பட வேண்டுமே தவிர கடிவாளத்துடன் வாழ்க்கை முழுவதும் அலையக்கூடாது.

இசங்களைப் படித்தவர்கள் அங்கேயே நின்றுவிட்டதால்தான் நிகழ்கால சமூகப் பிரச்சனைகளுக்கு புதிய தீர்வுகள் இன்னும் பழைய புத்தகங்களிலேயே தேடப்படுகிறது. நூல்களில் இருந்து பெறுவது வாசிப்பு அனுபவம. வாசிப்பே அறிவாகிவிடாது. ஒவ்வொரு்வருக்கும் குடும்பச் சூழலில் தொடங்கி, அவரது குடும்பம் பின்பற்றும் கொள்கைகள், அவரது கல்விச் சூழல், கல்வி, நண்பர்கள், பிறக்கும் ஊர், நாடு, அவர் படிக்கும் நூல்கள் .....இவைகளில் கிடைப்பது பகுத்தறிவு இல்லை... அதன் பெயர் அனுபவம் அல்லது அனுபவ அறிவு.

இப்படிக் கிடைத்த அனுபவங்களையும், இசங்களையும், தத்துவங்களையும் இன்னபிற விசயங்களையும் கேள்விக்கு உட்படுத்தி அதனை மேலும் ஆராய்வதே பகுத்தறிவு. கப்பல் பயணைத்தில் கிடைத்த அனுபவ அறிவு பாலைவனப் பய்ணத்திற்கு அப்படியே பயன் படாது.

முன் முடிவுகள் இல்லாமல் அனைத்தையும் கேள்விக்கு உட்படுத்தி அதன் மூலம் தனக்கென ஒரு புரிதலை அடைவதே பகுத்தறிவு. அந்த பகுத்தறிவின் மூலம் புதிய தீர்வுகள் கண்டறியப்படவேண்டும்.

அனுபவம் (கற்றல்,கேட்டல்,உணர்தல்..) + அவற்றை கேள்விக்கும் பரிசோதனைக்கும் உட்படுத்துதல் + சுய புரிதல் = பகுத்தறிவு.


இது பகுத்து அறியும் அறிவியல். இந்த அறிவியலின் மூலம் நிகழ்காலப் பிரச்சனைக்குத் தீர்வுகாண வேண்டுமே தவிர பழைய இசங்களில் நம்மை தொலைத்துவிடக்கூடாது. இசங்களைப் படித்தல் ஒரு அனுபவம் , ஆனால் எல்லாப் பிரச்சனைகளுக்கும் பழைய புத்தகங்களில் விடை தேடுவதும், நாடி ஜோதிடம் பார்ப்பதும் ஒன்றுதான்.

நீங்கள் 5 வயதில் பகுத்தறிந்த ஒன்றை 50 வயதிலும் பகுத்தறிய தயாராக இருக்க வேண்டும். தொடர்ச்சியாக கேள்விகளுக்கு உட்படுத்திக் கொள்வது அறிவியல். அதாவது "." டன் (முற்றுப் புள்ளியுடன் ) நிற்காமல் , அடுத்த தலைமுறையும் தொடர்ந்து சிந்திக்கும் வண்ணம் "," வைப்பது. உதாரணமாக் இதுதான் இறுதி இறை வேதம் அல்லது இறுதி அவதாரம் அல்லது தூதர் என்று சொன்னால் அங்கே "." வந்து விடுகிறது. அறிவியல் அப்படி அல்ல.

"பின் நவீனத்துவம் " (இது தத்துவம் அல்ல காலக் குறியீடு ) தொடங்குவதற்கு முன்னர் அல்லது அது ஒன்று அறியப்படாதபோது அதை உணர்ந்தவர்கள்/கண்டுபிடித்தவ்ர்கள்/...அவர்கள் வாழ்ந்த நாடு/காலம்/.. போன்றவற்றில் இருந்து பெற்ற உணர்வுகளால் இத்தகைய புதிய காலத்தை கட்டமைக்க அல்லது அது சார்ந்த சிந்தனையை வெளிப்படுத்த கற்றுக் கொண்டர்கள். அதாவது அவர்கள் வாழ்ந்த கால்த்தில் அவர்களின் நிலப்பரப்பில் இருந்த வினைகளுக்கு எதிர்வினையாக அல்லது மாற்றாக சிந்தித்தார்கள், புதியதை உருவாக்கினார்கள். நாமும் நமது மக்களுக்கு இந்தச் சூழலில் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டுமே தவிர , படித்த இரவல் சிந்தனைகளை அப்படியே பேசிக்கொண்டிருப்பதால் ...சமூகத்தை விடுங்கள், அதைப்படித்தவனுக்கே ஒரு பயனும் இல்லை.

இசங்களின் அல்லது மதங்களின் அல்லது நவீனத்துவங்களின் படிப்பு அல்லது வாசிப்பு எப்படி இருக்க வேண்டும் என்றால்...

4+3 = 7 என்று பழைய (இரவல் சிந்தனை) புத்தகங்ளில் இருந்து கற்றுக் கொள்வது தவறு இல்லை. அதுதான் கற்றலின் வழியும்கூட. ஆனால்,
கற்றபின் அதே 4+3 இல் நின்று கொண்டு வியாக்கியானம் பேசாமல் (யார் அதிக புத்தகம் படித்துள்ளார்கள் என்பதுபோல ) தான் வாழும் சமூகத்திற்கு ஏற்ற புதிய சிந்தனைகளை உருவாக்க வேண்டும். அதாவது 4+4=8 என்ற அளவிலாவது.

சுஜாதா ,மதன் வகையறாக்கள் 10 வெளிநாட்டு புத்தகங்களைப் படித்து விட்டு சுவற்றில் ஒண்ணுக்குபோவது "ஆணீயம்" என்றும் "தமிழனக்கு வரலாறு இல்லை" என்ற ரீதியில் எப்படி வாரப்பத்திரிக்கை வாசகனை "வாசக வட்டத்திற்குள்" கொண்டு வந்து காசு பார்க்கிறார்களோ அப்படியே இந்த பின்/முன்/பக்கவாட்டு நவீனத்துவ/இலக்கிய/கம்யீனிச/காந்திய வியாதிகள் தங்கள் பக்க நியாயத்தை தத்தம் குழுக்களில் பேசித் தீர்த்துக் கொள்கிறார்கள் அல்லது அறிவு சீவிப் பட்டம் பெற்றுக் கொள்கிறார்கள். அந்த இசங்களாகவே வாழ்ந்து சுயம் இழக்கிறார்கள் ஒரு சினிமா கதாநாயகனின் இரசிகனைப்போல.


Picture courtesy:
www.artofancientafrica.com

8 comments:

 1. நல்ல கருத்து, நல்ல உதாரணம் மூலமாக சொல்லியிருக்கிறீர்கள்.

  சில வரிகள் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே.. என் இந்த பதிவில் நீங்க போட்ட பின்னூட்டம்தான். :)

  ReplyDelete
 2. நல்ல இடுகை கல்வெட்டு,

  எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற அறிவு வாய்த்து விட்டால் போதும்.

  கட்டங்களுக்குள் நம்மை நாமே அடக்கிக் கொள்வதும், அடுத்தவர்களை கட்டம் போட்டு புரிந்து கொள்ள முனைவதும் நிச்சயம் அறிவு ஆகாது.

  அன்புடன்,
  மா சிவகுமார்

  ReplyDelete
 3. I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.

  ReplyDelete
 4. நிச்சயமாக யாவரும் உணர வேண்டிய கருத்து.

  //தான் வாழும் சமூகத்திற்கு ஏற்ற புதிய சிந்தனைகளை உருவாக்க வேண்டும். அதாவது 4+4=8 என்ற அளவிலாவது//

  ஆனால் வாழ்க்கையில் எந்த ஒரு நிகழ்வை் பார்த்தாலும் (கேட்டாலும)் தான் அதை பார்க்கும் கண்ணாடி தனது அனுபவம் தந்த வழி் (அது காந்தியமோ மார்க்சியமோ) என்பதை உணராதவர்கள்தான் அதிகமில்லையா?

  அந்த கண்ணாடியை கழட்டிப் பார்க்க சுயபரிசோதனைகள் அவசியம் என்று நினைக்கிறேன்.

  சுயபரிசோதனைகள் எல்லோருக்கும் சாத்தியமா?

  ReplyDelete
 5. சில பிரச்சனைகளுக்கு பொதுவான தீர்வுகளும் இருக்கலாம் அல்லவா. காலத்தால் சோதனை செய்து அக்மார்க் முத்திரை குத்தி, இதைச் செய்தால் இந்த பிரச்சனை தீரலாம் என்று உத்திரவாதத்தினை காலம் சொல்லலாம் அல்லவா.
  ஆன்மீகத்தில் அப்படி நிறைய பயனுள்ளவை இருப்பதாக நினைக்கிறேன். ஆனால் அவற்றிலும் எல்லாமும் எல்லாருக்கும் பயன் தரும் என்று சொல்ல முடியாது. அவரவர் தானாக சோதனை செய்து பார்த்தால் தான் தெரியும். வெறும் நம்பிக்கைகள் மட்டும் ஆன்மீகம் அல்லவென்றும், அவையும் ஒவ்வொருவரின் சுய சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியதுதான்.
  //
  பழைய தத்துவங்கள் ,இசங்கள் புதியவற்றைச் சமைக்க ஒரு கருவியாக இருக்க வேண்டுமே
  //
  வழிமொழிகிறேன்!

  எல்லோருமே எதோ ஒரு பயனுக்குத்தான் எதையுமே செய்கிறார்கள். அதில் கொஞ்சமாவது பொதுநலன் வாய்த்து விட்டால் அதுவே போதும்.

  ReplyDelete
 6. //கடிவாளத்தைக் கொண்டு காரை ஓட்ட நினைக்கக்கூடாது. //

  மொத்தத்தில் நல்ல ஒரு பதிவு - வழமை போலவே.

  ReplyDelete
 7. //எல்லாப் பிரச்சனைகளுக்கும் பழைய புத்தகங்களில் விடை தேடுவதும், நாடி ஜோதிடம் பார்ப்பதும் ஒன்றுதான்.//

  சரியான பாயிண்ட்!

  ReplyDelete
 8. //சுஜாதா ,மதன் வகையறாக்கள் 10 வெளிநாட்டு புத்தகங்களைப் படித்து விட்டு சுவற்றில் ஒண்ணுக்குபோவது "ஆணீயம்" என்றும் "தமிழனக்கு வரலாறு இல்லை" என்ற ரீதியில் எப்படி வாரப்பத்திரிக்கை வாசகனை "வாசக வட்டத்திற்குள்" கொண்டு வந்து காசு பார்க்கிறார்களோ //

  இந்த புத்தக மேயர பயலுக இருகானுகலே ...இவங்களது penis- தான் 1 அடி நீளம் கற அளவுக்கு பேசுவானுக....

  ReplyDelete