Thursday, February 21, 2013

இறந்த அனைத்து குழந்தைகளுக்கும் சாட்சியாய் இவன்

ப்பனின் அரசியல் நிலைப்பாடுகளுக்காக சின்னப்பிள்ளைகளை இப்படி ஆற அமர உட்கார வைத்து பிஸ்கெட் கொடுத்து குளோஸ் ரேஞ்சில் (close range) கொல்வதற்கு வன்மங்களால் நிரம்பி வழியும் கொடுமனம் கொண்டிருக்க‌ வேண்டும். இப்படியான ஒரு சாவிற்குப்பதில் ,வானில் இருந்து பொழிந்த எண்ணற்ற குண்டுவீச்சுகளில் ஏதோ ஒரு ஒன்றில் அழிந்துபோன, முகம் பதிவுசெய்யப்படாத எண்ணற்ற குழந்தைகளில் ஒன்றாக சேர்ந்து இறந்திருக்கலாம் இவன். அப்படியான கூட்டுக்கொலை தருணங்களிலாவது பற்றிக்கொண்டுசாக ஏதோ ஒரு கரம் கூடவே இருந்து இருக்கும். சாகும்போதான‌ தனிமை , அதுவும் இப்படியான ஒரு நிலைமை , அதுவும் குழந்தைகளுக்கு கொடியது. அமெரிக்காவில் சமீபத்தில் ஒரு பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் இப்ப‌டித்தான் குளோஸ் ரேஞ்சில் வைத்து சுடப்பட்டார்கள். http://en.wikipedia.org/wiki/Sandy_Hook_Elementary_School_shooting

குழந்தையைப் பறி கொடுத்த ஒரு தாய் சொன்னது  "....எனது குழந்தை சாகும்போது அவன் ஆசிரியரின் கையைப் பிடித்துக்கொண்டே இறந்துள்ளான். என் குழந்தை தனியாக இருக்கவில்லை. அந்தக் கொடுமையான தருணத்தில்கூட அவனை அணைக்க ஒரு கரம் இருந்துள்ளது. அதை நினைத்து கொஞ்சம் ஆறுதலாக உள்ளது....." என்று சொன்னார். (அந்தக் குழந்தையுடன் அந்த ஆசிரியையும் இறந்துகிடந்த கோலத்தைப் பார்த்து காவல் அதிகாரிகள் அந்த அம்மாவிற்கு சொல்லியுள்ளார்கள்.)

ஆம் கொடுமையாக நடத்தொழிக்கப்பட்ட இனப்போரில் இறந்துபோன எத்தனையோ குழந்தைகளில் இவனும் ஒருவன். இவனின் அப்பா தலைமை பொறுப்பில் இருந்தார் என்பதற்காக இவனின் இறப்பு எந்த சிறப்பான தகுதியையும் பெற்றுவிடவில்லை. ஆனால், இவனின் அப்பா தலைமை பொறுப்பில் இருந்த ஒரே காரணத்திற்காக, நிறுத்தி நிதானமாக இவன் கொல்லப்பட்ட விதம் புகைப்படமாக வெளிவந்தவுடன் மனதைப் பிசைகிறது. "சித்திரவதைப்படுத்தாமல் விட்டார்களே" என்று எண்ணினால்கூட, குழந்தைகள் உலகத்தைப் புரிந்துகொண்டவர்களுக்கு இந்தக் காட்சிகள் சொல்லும் கதைகள் மனதை அறுக்கும். எளிதில் கடந்துபோய்விட முடியாத ஒன்று இந்தக் காட்சி.
போரில் இறந்த அனைத்து குழந்தைகளின் கொலைகளுக்கும் சாட்சியாய் இவன். இவனின் அப்பாவித்தனம் மனசைப் பிசைகிறது.


J
allianwala Bagh - யும் Holocaust -யும் அறிந்து வைத்துள்ள நாம், இன்று நம் கண்முன்னால் முள்ளிவாய்க்காலை மையமாகக் கொண்டு நடந்தேறிய கொடூரங்களை எந்த அளவு அறிந்துள்ளோம்? தமிழனாய் பிழைத்திருப்பது (Survival) முக்கியமல்ல. தமிழனாய் உணர்வதும் (Feel) வாழ்வதும்  (Living) முக்கியம். எத்தகைய கொடூரங்கள் நடந்தாலும் தின்று செரித்துவிட்டு வாழ்ந்துகொண்டு இருக்கும் ஜடங்களாய் ஆகிவிட்டோம் நாம். ஆம், தனி மனிதர்கள் ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான் நிதர்சனம்.நாம் அனைவரும் நம்மீது எறியப்படும் கல்லின் அளவிற்கு ஏற்ப முனகும் சாமானியர்கள். கற்கள் நம்மீது வந்து விழாதவரை கவலைப்படுவது இல்லை. ஆசிரியர்கள் ஒரு சமூக அங்கமாக இருந்தாலும் , அவர்களுக்கான பிரச்சனைகளுக்கு அவர்கள் மட்டுமே குரல் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். விவசாயிகள் சமூகத்தின் ஆதரமான சக்தியாக இருந்தாலும் , எலிக்கறி தின்று கொண்டு நாசமடைந்தாலும் அது "டெல்டா விவசாயிகளின் பிரச்சனையாக" மட்டுமே வந்துபோய்க்கொண்டு இருக்கும். நெசவுத் தொழில் சீரழிந்து கஞ்சித்தொட்டிகள் வைக்கப்பட்டாலும் , அந்த நிகழ்வு அவர்களின் பிரச்சனையாக மட்டுமே ஆராயப்படும். தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டங்களுக்கு பிறகு மக்கள் சேர்ந்து நடந்திய எந்த பெரிய எதிர்ப்புகளும் இதுவரை இல்லை.

ப்படியான பொதுசன‌ங்களைக் குற்றம் சொல்லவும் முடியாது. ஏன் என்றால் மனிதர்களில் இந்த நடுத்தரவரக்கம் (பணத்தில் அல்ல குணநலன்களில்) தேங்கிப்போன ஒரு குட்டை. இவர்களின் தேடல் பயணம் நின்று நெடுநாளாகிவிட்டது. குளம் குட்டை போன்ற நீர்நிலைகள் தன் மீது கொட்டப்படும் நீரை வைத்து பிழைத்துக்கொண்டு இருக்கும். பயணம் (தேடல்) இருக்காது. சாக்கடை வந்து சேர்ந்தாலும் அமைதியாய் இருக்கும். இத்தகைய குளங்கள் கல்லெறியப்படும்போது மட்டுமே கலங்கும். அப்படி கலங்கும் போது வரும் அலைகள்கூட கரையைத்தொடாது. எறியப்படும் கல்லின் அளவைப் பொறுத்து உண்டான அலைகள் நடுவில் நின்றுவிடும். நம் போன்றவர்கள் இத்தகைய குளம். தேங்கிவிட்டவர்கள். கல்லெறியப்படும்போது நம்மால் முடிந்த அலைகளை எழுப்பிவிட்டு அமைதியாகிவிடுகிறோம். அசிங்கமாய் இருந்தாலும் அதுதான் நிதர்சனம் என்பதில் எனக்கும் வெட்கம் உண்டு.

பொது மக்கள் என்று சொல்லப்படும் ஒரு பிரிவு எந்தப் பிரச்சனைகளுக்கும் கொந்தளித்ததாக தெரியவில்லை. ஆனால் சமீபத்தில் "அன்னா கசாரே" ஊழல் எதிர்ப்பு பேரணிகள் மற்றும் "டெல்லி பெண்ணின் வண்புணர்வு கொலைக்கு" எதிராக ஒரு புதிய கூட்டம் தெருவிற்கு வந்து குரல் கொடுத்தது. நிச்சயம் ஆதரிக்கப்படவேண்டிய ஒன்று இவர்களின் போராட்டம்.  இவர்கள் யார்? எங்கே வாழ்கிறார்கள்? இவர்களிடம் எப்படி மற்ற பிரச்சனைகளையும் கொண்டு சேர்ப்பது? விவசாயி, ஆசிரியர், நெசவாளி போன்ற பொதுப்பிரச்சனைகளில் இவர்களையும் எப்படி பங்கு கொள்ள வைப்பது? என்று எனக்கு தெரியவில்லை. இவர்கள் மின்னல் போல வந்துவிட்டு போய்விடுகிறார்கள். இவர்களின் உணர்வுகளை ஒரு சில ஊடக தந்திரங்களால் மட்டுமே தட்டி எழுப்ப முடிகிறது. சொந்த சகோதரன் அவனது பிரச்சனையை முன்னிருத்தி அற‌வழியில் போராடினாலும் , கூடங்குளம் பிரச்சனையை அது ஒரு என்ஜிஓ பிரச்சனை என்று சுலபமாக கடந்து செல்ல முடிகிற‌து இவர்களால். ஒரு சின்ன நீர்க்குமிழிக்குள் வாழும் இவர்களின் செயல்பாடுகள் வெகுசன ஊடகங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. "எதற்காக மட்டும் குரல் கொடுக்கலாம்?" என்பதை இவர்கள் பார்க்கும் செய்தி ஊடகமும் அது திணிக்கும் செய்திகளுமே தீர்மானிக்கிறது.

ழம் என்றாலே எதோ தமிழர்கள் அவர்களாக விரும்பி விளையாடும் விளையாட்டு எனவும், அவர்கள்தான் முதல் குற்றவாளிகள் எனவும் இத்தனை காலமமாக சித்தரித்து வந்த இந்து பத்திரிக்கை அதன் லங்க ரத்னா அவார்ட் வின்னர் இராமின் தலைமைக்குப்பிறகு , ஏன் இப்போது இதைச் செய்தியாக்குகிறார்கள்? http://www.thehindu.com/opinion/op-ed/the-killing-of-a-young-boy/article4428792.ece  ஒருவேளை இப்போதுதான் இவர்களுக்கு இலங்கையின் செயல்பாடுகள் தெரியவருகிறதா? அல்லது இப்போதுதான் தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டார்களா?

த்திரிக்கைகளின் ஆதரவு எதிர்ப்பு நிலைகளைத்தாண்டி தமிழகத்தில் உள்ள முக்கியமான கட்சிகளின் அரசியல் நிலை என்னவென்று தெரியவில்லை. இத்தைகைய சூழலில் மக்கள் தேர்ந்தெடுத்த அதிகாரமும் ஆட்சியும் தான் இறுதி நம்பிக்கை. அரசியல் கட்சிகளும் , அதிகார மையங்களும் பேராறு போன்ற திறன் கொண்டவை. எப்போதும் சலசலத்து பயணித்துகொண்டே இருக்கும். இறுதியில் தன்னை அழித்துக்கொள்ளவும் செய்யும். அப்படித்தான் கடந்த காலத்தில் ஒரு சில அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும், மக்கள் இயக்கங்களும் சமூக மாற்றங்களுக்காக போராடின. ஆனால் இன்று அப்படியான அரசியல் கட்சிகளோ தலைமையோ இல்லை. பேராறு போன்ற திறன் கொண்டு போராடவேண்டிய இயக்கங்களே குளமாகிவிடும்போது அனைத்தும் தேங்கிவிடுகிறது.

ந்தச் சிறுவனின் அப்பாவி முகத்தையும், அதற்கு அடுத்த படத்தில் அவன் இறந்துகிடக்கும் காட்சியைப் பார்த்த பலரும் நெஞ்சு துடித்து தத்தம் அளவில் வருத்தத்தை பதிவு செய்து கொண்டு இருக்கும்போது (காங்கிரஸ் கட்சி) அரசு வெளியுறவு அமைச்சர் "சல்மான் குர்ஷித்" அவர்கள் இப்படியான ஒரு செய்தியைச் சொல்கிறார்.
1. இலங்கை நமது நட்பு நாடு, அண்டை நாடு,முக்கிய நாடு, நல்ல நண்பர்கள்.
2. சமீபத்தில் வெளியான புகைப்படங்கள் குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது. அது நம்பகமானதா என்பதை சொல்ல முடியாது.

http://tamil.oneindia.in/news/2013/02/20/india-prabakaran-son-death-lanka-defiant-india-cautious-170162.html
து எப்படி இருக்கிறது? இவர்கள் எந்த மனநிலையில் இருந்து பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. மிகவும் வருத்தமாக உள்ளது. சரி இவர்கள்தான் இப்படி எங்கோ இருக்கிறார்கள் தமிழரகளின் உணர்வு தெரியவில்லை என்று விட்டுவிடலாம். ஆனால் , போர் நடந்துகொண்டு இருக்கும்போது அதிகாரத்தில் இருந்தவர் என்ற முறையில் கலைஞ‌ரின் செயல்பாடுகள் எனக்கு உவப்பானதும் அல்ல. பெரும்பகுதிகடற்கரை பகுதியை மாநில எல்லையாகக்கொண்ட அதுவும் தனது எல்லையில் அடுத்த நாட்டைக்கொண்டுள்ள தமிழகத்திற்கு வெளிவிவகாரங்களில் அதிக பொறுப்பு உள்ளது. கலைஞர் வர்களுக்கு அது நன்றாகே தெரியும். மேலும் அவர் மாநில அரசின் அதிகாரத்தின் எல்லைகளை அறிந்தவர். நிர்ப்பந்தங்களை எபப்டி கொடுக்கலாம் என்பதை அறிந்தவர். ஆனால் அவர் அதை செயல்படுத்த முனையவில்லை. முள்ளிவாய்க்கால் போர்க்காலத்தில் ஏன் அவர் அப்படி பட்டும்பாடாமலும் நடந்துகொண்டார் என்று வரை எனக்கு விடை தெரியவில்லை. "ஈழத்திற்காக நிறைய செய்துவிட்டேன் இனிமேலும் இழக்க முடியாது என்று சொல்லிவிடலாம். யாரும் கேட்கப்போவது இல்லை. ஆனால், ஒருபுறம் டெசோ போன்ற கூட்டங்களை நடத்திக்கொண்டும், மறுபுறம்  "கொள்கைகள் ஒத்து இருப்பதால்தான் கூட்டணி தொடர்கிறது" என்றும் கலைஞர் சொல்கிறார்.
"கொள்கை மாறுபாடுகள் ஏற்பட்டாலொழிய நாங்கள் கூட்டணியிலிருந்து விலகுவதில்லை"
http://tamil.oneindia.in/news/2012/09/22/tamilnadu-will-not-quit-the-upa-haste-karunanidhi-161888.html
லங்கை விசயத்தில், காங்கிரசின் கொள்கையும் , திமுகவின் கொள்கையும் போர்க்காலத்தில் ஒத்து இருந்ததால்தான் போர்க்காலத்தின்போது கூட்டணி முறியவில்லை.கொள்கை மாறுபட்டிருந்தால் கலைஞர் நிச்சயம் கூட்டணியைத் தொடர்ந்து இருக்கமாட்டார். ஏன் என்றால் "கொள்கை மாறுபாடுகள் ஏற்பட்டாலொழிய நாங்கள் கூட்டணியிலிருந்து விலகுவதில்லை" என்று அவரே சொல்கிறார். இதுதான் எனது புரிதல். ஈழவிசயத்தில் கலைஞரின் நிலைப்பாடுகள் குழப்பமாக உள்ளது என்பதால்தான் அவரைக் கேள்வி கேட்க வேண்டியுள்ளது. "டெசோ" போன்ற விளையாட்டுகள் இல்லாமல், "நாங்க அப்ப ஆதரிச்சோம் பல இழப்புகள்,  இப்ப கொள்கை மாறிட்டோம்" என்று ஈழ வியசத்தில் தெளிவாகச் சொல்லிவிட்டால் திமுக நிலைப்பாடுகளை கேள்வி கேட்காமல் விட்டுவிடலாம். துக்ளக் "சோ" போன்றவர்களை ஏதும் கேட்பதில்லை. ஏன் என்றால் அவர்களின் நிலைப்பாடுகள் உள்ளங்கை பூசணிக்காய் போன்றது. ஆரம்பகாலம் முதல் அவர்களின் நிலைப்பாடுகள் மாறவில்லை.

மேலும் அதிமுக vs திமுக என்று கட்சிக்காரர்கள் எடுக்கும் நிலைகளும்,  அதற்கு அவர்கள் வைக்கும் வாதப் பிரதிவாதங்களும் ஈழ விசயத்தில் உதவாது. சேற்றைவாரி இறைத்துக்கொள்வதால் நெல் விளைந்துவிடாது. நானும் அந்த அரசியல் தளத்தில் இருந்து சொல்லவில்லை. அதிமுக வின் குறைகளை பட்டியலிடுவதாலேயே திமுக வின் தவறுகளை நியாயப்படுத்த முடியும் என்று முயற்சிக்காதீர்கள். அதுபோல திமுக வின் குறைகளை பட்டியலிடுவதாலேயே அதிமுக வின் தவறுகளை நியாயப்படுத்த முடியும் என்று முயற்சிக்காதீர்கள். ஒட்டு மொத்த தமிழகமும் சேர்ந்து, நம் கண்முன் நடக்கும் மனிதநேயத்திற்கு சாவால்விடும் கொலைகளுக்கு எதிராக ஏதாவது செய்ய இயலுமா? என்று சிந்திக்கலாம். வெறுமனே "ஒப்பீட்டளவில் திமுக‌ ஈழத்தின்பால் அதிக அக்கறை கொண்டது" என்று சொல்வதாலோ அல்லது "இல்லை இல்லை, ஒப்பீட்டளவில் அதிமுக‌ ஈழத்தின்பால் அதிக அக்கறை கொண்டது" என்று சொல்வதாலோ என்ன கிடைத்துவிடப்போகிறது,துயரில் சாகும் குழந்தைகளுக்கு? செயல்படாத தன்மை விசம் போன்றது. "பாலிடால்" என்ற கொல்லி "சயனைவிட" சமத்து என்று சொல்வதால் அதைக்குடித்தவனின் சாவு நிற்கப்போவது இல்லை...தள்ளிப்போகும். இதில் என்ன சிறப்பு உள்ளது?

 
ந்தியாவில் உள்ள புனித தலங்களுக்கு வந்து போகிறார் இராஜபக்சே. ஆம் காசு கொடுத்து அர்ச்சனைச்சீட்டு வாங்கிவிட்டால் ஆண்டவனுக்கு கொலைகாரன்கூட வாடிக்கையாளர்தான். அன்றாடங்காய்ச்சிகள் என்ன செய்துவிடமுடியும் புலம்புவதைத்தவிர.

For PDF version:
http://pdfmyurl.com/?url=http://kalvetu.balloonmama.net/2013/02/blog-post_1855.html

.

2 comments:

  1. //.நாம் அனைவரும் நம்மீது எறியப்படும் கல்லின் அளவிற்கு ஏற்ப முனகும் சாமானியர்கள். // உண்மை. எறியறது யார்ங்கறது பொறுத்தது முனகல்.

    இந்த இனப் படுகொலையை தமிழர்கள், சானல் 4 தவிர வேற யாரும் சீரியஸா எடுத்துக்கலயா?

    ReplyDelete
  2. அனைத்து தரப்பினரின் மனட்சாட்சியையும், அரசியல், அரசு, அவற்றை உருவாக்க வாக்களித்த மக்கள் அனைவரையும் சுண்டிப்பார்க்கும் கட்டுரைக்கு நன்றி. வேறென்ன சொல்ல, நானும் இதே தமிழர்கள் என்கிற குட்டையில் ஊறிய மட்டை தான்.

    ReplyDelete